தி.மு.க., விடம் இம்முறை 39 தொகுதிகள்! கேட்கிறது காங்.,:
தி.மு.க., விடம் இம்முறை 39 தொகுதிகள்! கேட்கிறது காங்.,:
UPDATED : டிச 04, 2025 12:10 AM
ADDED : டிச 04, 2025 12:02 AM

சென்னை : கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் கட்சி, இம்முறை 39 தொகுதிகள் கேட்கிறது. தொகுதி பங்கீடு பற்றி பேச, காங்கிரஸ் மேலிடம் அமைத்த ஐவர் குழு முன்வைத்த இக்கோரிக்கை குறித்து, தி.மு.க., தரப்பில் குழு அமைக்கப்பட்ட பின் ஆலோசிக்கலாம் என, முதல்வர் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2004 லோக்சபா தேர்தல் முதல், 2021 சட்டசபை தேர்தல் வரை, மொத்தம் ஏழு தேர்தல்களை, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் சந்தித்துள்ளது. இடையில், 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மட்டும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.
இந்நிலையில், புதிதாக தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், தன் தலைமையை ஏற்கும் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு தரப்படும் என அறிவித்தார். நீண்ட காலமாக ஆட்சி அதிகாரம் இல்லாமல் இருக்கும் தமிழக காங்கிரசார் மத்தியில், இது சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன் விளைவு, தி.மு.க., கூட்டணியில் நீண்ட காலமாக நீடிக்கும் கட்சியான காங்கிரசுக்கு, இம்முறையாவது ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்; அதற்கு வசதியாக, காங்கிரஸ் போட்டியிட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற குரல் கேட்கத் துவங்கியது.
காங்கிரசாரின் குரலையும், கோரிக்கையையும் தி.மு.க., தலைமை கண்டுகொள்ளவில்லை; தன் நிலையிலிருந்து இறங்கி வரவும் தயாராக இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த தமிழக காங்., கோஷ்டி தலைவர்கள் சிலர், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருக்கு அழுத்தம் கொடுத்தனர்.
அதனால், த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தி.மு.க.,விடம் தொகுதி பங்கீடு பற்றி பேச, திடீரென காங்கிரஸ் மேலிடத்தால் ஐவர் குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவில் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஐவர் குழுவினர், சென்னை அறிவாலயத்தில் நேற்று தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
தி.மு.க., தரப்பில் முதன்மை செயலர் நேரு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து முக்கியமாக பேசப்பட்டுள்ளது.
இம்முறை, 39 தொகுதி களுக்கு குறையாமல் ஒதுக்க வேண்டும் என, முதல்வரிடம் ஐவர் குழுவினர் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு, 'தி.மு.க., சார்பிலும் குழு அமைத்த பின் ஆலோசிக்கலாம்' என, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:
கூட்டணி தொடர்பாக எல்லாருக்கும் நிறைய சந்தேகங்கள் இருந்தன. கிழக்கா, மேற்கா, தெற்கா, வடக்கா என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, 'இண்டி' கூட்டணி வலிமையாக நீடித்து வருகிறது.
இதற்கு மிகப்பெரிய உதாரணம், முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த இந்த சந்திப்பு தான். இனி கூட்டணி குறித்து சந்தேகமே இல்லை. இந்த சந்திப்பால், முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
'தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் 63, 41, 25 என குறைந்து கொண்டே வருகிறதே; ஆட்சியில் பங்கு கேட்பீர்களா' என்ற கேள்விக்கு, ''பொறுத்திருந்து பாருங்கள்; தி.மு.க.,வும் குழு அமைத்த பின், தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை,'' என செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.

