அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது; மாணிக்கம் தாகூர்
அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது; மாணிக்கம் தாகூர்
UPDATED : ஜன 27, 2026 06:48 AM
ADDED : ஜன 26, 2026 03:18 PM

சென்னை: அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறி உள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருபவர் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர். கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது, அதிகார பங்கீட்டுக்கான நேரம் இது என்றும் அவர் கூறி வருகிறார்.
அவரின் இத்தகைய தொடர் பேச்சுகள், கருத்துகள் திமுக தலைமையை சீண்டுவதாக அமைந்துள்ளது. அண்மையில் தை முதல் நாளில், ஆட்சியில் பங்கு என்பதை அறிய கேரள மாநிலம் ஒரு மாடல் என்று பதிவிட்டு இருந்தார். கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பதை அவர் அடிக்கோடிட்டு காட்டி இருந்தார்.
இந் நிலையில் மீண்டும் திமுகவை சீண்டும் வகையில் மாணிக்கம் தாகூர் ஒரு எக்ஸ் வலைதள பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன்.
தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது.
இவ்வாறு அந்த பதிவில் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவுடன்,நாங்கள் இல்லாவிட்டால் இண்டி கூட்டணியே கிடையாது என்று மதுரை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி திமுக மாணவர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக் கூட்டத்தில பேசியதை மேற்கோள் காட்டி உள்ளார்.

