சட்டசபை தேர்தலில் 125 தொகுதிகளில் காங்., போட்டி: கிரிஷ் சோடங்கர் உறுதி
சட்டசபை தேர்தலில் 125 தொகுதிகளில் காங்., போட்டி: கிரிஷ் சோடங்கர் உறுதி
ADDED : செப் 08, 2025 02:30 AM

திருநெல்வேலி: 'தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், 125 தொகுதிகளில் காங்., போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்' என திருநெல்வேலியில் நடந்த காங்., மாநாட்டில் கட்சியின் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் பேசினார்.
மாநாட்டில், அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நடக்கும் இந்த காங்கிரஸ் மாநாட்டின் வாயிலாக, தேசிய அளவில் ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை சொல்கிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் 22,000 கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, ராகுலிடம் நான் கூறுகையில், 'நீங்கள் தமிழகத்திற்கு சென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் 22,000 கிராமக் கமிட்டியில் உள்ள 2 லட்சம் உறுப்பினர்களையும் சந்திக்கலாம்,' என தெரிவித்தேன்.
ராகுலும், கட்சியின் தேசிய தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவும் தமிழகத்திற்கு வந்து கிராமக் கமிட்டியினரை நேரில் சந்திப்பதாக கூறினர்.
தமிழகத்தில் 117 சட்ட சபை தொகுதிகளை குறி வைத்து பணி செய்வோம். தேர்தலில், 125 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதற்கான தொகுதிகளை தயார் செய்யுங்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் நடக்கிறது. இந்த ஓட்டு திருட்டை ராகுல் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தார்.
இவ்வாறு கிரிஷ் சோடங்கர் பேசினார்.