UPDATED : நவ 19, 2026 07:18 PM
ADDED : நவ 19, 2026 07:16 PM
– நமது நிருபர் –
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கும், முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையே மீண்டும் மோதல் உருவாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், த.வெ.க., –எம்.எல்.ஏ., அருள் விக்னேஷுக்கு ஆதரவாக பேசிய மாணிக்கம் தாகூர், ‘அருள் விக்னேஷ் பாவம்; வாட்ஸாப் தகவல்களை மட்டும் அடிப்படையாக வைத்து, ஒருவரை குற்றவாளியாக்கி விட முடியாது’ என, கருத்து தெரிவித்தார்.
அதை கண்டிக்கும் வகையில், ‘பாவம் என்ற வார்த்தையில், கடந்து சென்று விட முடியாது. அப்படி பார்த்தால், ‘கிரானைட்’ வீரமணியையும் பாவம் என, சொல்ல முடியுமா?’ என, செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
இது குறித்து, தமிழக காங்., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில், செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், மாணிக்கம் தாகூருக்கும், செல்வப்பெருந்தகைக்கும் இடையே, நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது.
தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படும் செல்வப்பெருந்தகை, தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் இணைந்து விடுவார் என, மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். செல்வப்பெருந்தகையோ, உள்ளாட்சி தேர்தல் வரை அமைதியாக இருக்கும்படி, தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, த.வெ.க., தலைமையிலான கூட்டணி அரசில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், ‘தமிழகத்தில் சட்டம் –ஒழுங்கு சரியில்லை’ என, த.வெ.க., அரசுக்கு எதிராக செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்தார்.
அதற்கு கண்டனம் தெரிவித்த, காங்கிரசை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன், ‘செல்வப்பெருந்தகை, தற்போது எந்த கட்சியில் இருக்கிறார்; இனி, எந்த கட்சிக்கு செல்லப் போகிறார்?’ என, கேள்வி எழுப்பினார்.
இதனால், ‘தி.மு.க.,வில் செல்வப்பெருந்தகை இணைவது உறுதி’ என்ற தகவல் பரவியது. இதற்கு, விளக்கம் அளித்த செல்வப்பெருந்தகை, ‘‘என் பயணம் தொடரும். விமர்சனங்களை கண்டு விலகவும் மாட்டேன். அவதுாறுகளை கண்டு அஞ்சவும் மாட்டேன். இது தான் என் அடையாளம்; இது தான் என் அரசியல்’’ என, கூறியுள்ளார்.
