'காங்., ஓட்டு இருந்தால் தான் வெற்றி' : எம்.பி., மாணிக்கம் தாகூர் காட்டம்
'காங்., ஓட்டு இருந்தால் தான் வெற்றி' : எம்.பி., மாணிக்கம் தாகூர் காட்டம்
ADDED : ஜன 06, 2026 05:15 AM

விருதுநகரில் காங். எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியதாவது: தேசிய அளவில் கூட்டணி ஆட்சி இருப்பது போல மாநில அளவிலும் கூட்டணி ஆட்சி அவசியம்.
2026 சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக எந்த கட்சியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, கூட்டணி அமைத்து தான் வர முடியும் என்பது சமீபத்திய கருத்துக்கணிப்பில் தெரிகிறது. இண்டி கூட்டணிக்கு 30 சதவீதம் ஓட்டு வரும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 4 சதவீதம் குறைவாக வரும் என்கிறது இந்த சர்வே. ஸ்டாலின் தான் ஆட்சி அமைப்பார், ஆனால் தி.மு.க., தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்கிறது கருத்துக்கணிப்பு. தி.மு.க., முன்னாள் எம்.பி., அப்துல்லா மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்.
பல கட்சிகள் இணைந்து தான் தமிழகத்தில் ஒரு கட்சியை வெற்றி பெறச் செய்யும் நிலை உள்ளது. டில்லியில் அதிகாரத்தில் பங்கு தர காங்., தயாராக உள்ளது. தமிழகத்தில் 2026ல் பங்கு தர வேண்டும். காங். கட்சி தமிழக பொறுப்பாளர் கிரீஷ் சோடேங்கர் கூறியது போல் கூட்டணி ஆட்சி அவசியம். ஜெயிப்பதற்கு காங். ஓட்டு தேவையாக உள்ள போது ஆட்சியில் எப்படி பங்கு தராமல் இருக்க முடியும்.
அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கூறினால் அது அவர்கள் விருப்பம். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். கார்கே அமைத்த குழுவினர், தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ளனர். அமித்ஷா அலை தமிழகத்தில் வீசாது. கூட்டணி ஆட்சி என்ற தினகரனின் கருத்தை வரவேற்கிறேன், என்றார்.
கூட்டணியால் தான் வெற்றி
மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன் நகரில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 13.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்து மாணிக்கம்தாகூர் கூறியதாவது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரை விமான நிலையம், மெட்ரோ என எது கேட்டாலும் செய்ய மறுக்கிறார். திருப்பரங்குன்றத்தில் மதவெறியை துாண்ட வேண்டும், பிரச்னையை கிளப்ப வேண்டும் என்றால் எல்.முருகன் வேலுடன் வந்துவிடுகிறார். மதுரையின் உண்மையான பிரச்னைகளுக்கு அவர் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் 'இண்டி' கூட்டணி வெற்றி பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம். வெற்றி உறுதியாகிக் கொண்டிருக்கிறது. அதற்காக அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம் என்றார்.

