என்னை கொலை செய்ய சதி!: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி பகீர்
என்னை கொலை செய்ய சதி!: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி பகீர்
ADDED : பிப் 03, 2025 12:08 AM

சென்னை: போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால், தன்னை கொல்ல சதி நடந்திருப்பதாக, தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி கல்பனா நாயக், குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், கல்பனா நாயக் கூறியுள்ளதாவது: ஜூலை 29, 2024 அன்று, சென்னையில் எனது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை, நான் வெளிக்கொண்டு வந்த சில நாட்களில், இந்த தீவிபத்து நடந்தது.
சென்னை ஐகோர்ட் உத்தரவை மீறி நடந்த இந்த ஆட்சேர்ப்பை நான் தடுத்ததால், தமிழக அரசுக்கு ஏற்படவிருந்த அவமானம் தடுக்கப்பட்டது. ஆனால் அது, என் உயிருக்கு ஆபத்தையும், அரசு சொத்துக்களுக்கு சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 29 அன்று, சென்னையில் உள்ள எனது அறைக்கு சென்ற போது, அங்கு தீவிபத்து நடந்திருந்தது. எரிந்த என் நாற்காலியை கண்டபோது, அதிர்ச்சி அடைந்தேன். நான் சிறிது நேரத்திற்கு முன்பு அறைக்கு வந்திருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். ஏசி.,யில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக நடந்த இந்த தீவிபத்து, என் அலுவலகத்தை அழித்து விட்டது. விபத்து நடந்த ஒரு நாளிலேயே, போலீஸ் ஆட்சேர்ப்பு பட்டியல், எனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது.
மூத்த அதிகாரியின் உயிருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவினால், மற்ற போலீசாரின் நிலைமையை சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப்பிறகு, அதாவது, ஆகஸ்ட் 15, 2024 அன்று, இப்புகாரை, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு, கல்பனா நாயக் அனுப்பி உள்ளார். புகார் குறித்து விரிவான விசாரணைக்கு, டி.ஜி.பி.,யும் உத்தரவிட்டார். ஆனால், 6 மாதங்களுக்கு பிறகும், விசாரணை முடிவுகள் வெளிவரவில்லை.
இருப்பினும், தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாக, கல்பனா நாயக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.