ஆன்லைனில் அடிக்கடி மாறு ம் கட்டட அனுமதிக்கான கட்டணம் கட்டுமான துறையினர் புகார்
ஆன்லைனில் அடிக்கடி மாறு ம் கட்டட அனுமதிக்கான கட்டணம் கட்டுமான துறையினர் புகார்
ADDED : நவ 14, 2025 12:55 AM
சென்னை:ஒற்றை சாளர முறை அமல்படுத்தப்பட்ட நிலையிலும், கட்டட அனுமதிக்கான கட்டணங்களில், வேறுபாடு காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கட்டட அனுமதி வழங்கும்போது, ஒவ்வொரு நிலைக்கும் பரப்பளவு அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட நிலம் அமைந்துள்ள உள்ளாட்சியின் நிலை அடிப்படையிலும், கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதில் எவ்வித குழப்பமும் இன்றி, மக்கள் கட்டணங்களை செலுத்த வேண்டும் என, அரசு பல்வேறு நடைமுறைகளை வரையறுத்துள்ளது.
பொது கட்டட விதிகளிலும், அது தொடர்பான அரசாணைகளிலும் கட்டணங்கள் விகிதத்தில், எந்த குழப்பமும் இல்லை.
ஆனால், 'ஆன்லைன்' முறையில் கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யும்போது, பரிசீலனை முடிந்ததும், கட்டண விப ரங்கள் தெரிவிக்கப்படும். இதில், வழக்கத்துக்கு மாறாக, கட்டணங்களில் வேறுபாடு அதிகமாக காணப்படுகிறது.
ஊராட்சி பகுதியில் அமையும் கட்டடத்துக்கு, பேரூராட்சிக்கு இணையான தொகையும், சில சமயங்களில் நகராட்சிக்கு இணையான கட்டணமும் கேட்கப்படுகிறது. 'மேனுவல்' முறை என்றால், அதிகாரிகளின் கவனக்குறைவை காரணமாக கூறலாம்.
இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்பட்ட தரவுகள் அடிப்படையிலான கட்டணத்தில், வேறுபாடு இருப்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் சிறிய வேறுபாடு ஏற்பட்டாலும், சில லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என, கட்டுமான துறையினர் கூறுகின்றனர்.
இது குறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
கட்டட அனுமதிக்கான கட்டண விகிதங்களில், எவ்வித குழப்பமும் ஏற்படக் கூடாது என்பதற்காக, ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டது.
ஆனால், இதில் கட்டணங்கள் வேறுபட்டு காணப்படுகின்றன.
குறிப்பாக, பரிசீலனை கட்டணத்தில், ஒரு ஊராட்சிக்கும், இன்னொரு ஊராட்சிக்கும் இடையே வேறுபாடு காணப்படுகிறது.
இது மட்டுமல்லாது, ஒரு ஊராட்சியில் கட்டுமான பணி உரிமம் என்று வழங்கப்படும் சான்று, இன்னொரு ஊராட்சியில் வேறு பெயரில் வருகிறது.
இதை பயன்படுத்தி, வங்கிக் கடன், பத்திரப்பதிவுக்கு செல்லும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

