தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்ட ஊராட்சிகளில் கட்டட அனுமதி வழங்கும் பணிகள் முடக்கம்; கட்டுமான துறையினர் புகார்
தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்ட ஊராட்சிகளில் கட்டட அனுமதி வழங்கும் பணிகள் முடக்கம்; கட்டுமான துறையினர் புகார்
ADDED : ஜன 16, 2025 12:20 AM

சென்னை : மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்ட ஊராட்சிகளில், 'ஆன்லைன்' முறையில் கட்டட அனுமதி வழங்கும் பணிகள் முடங்கி உள்ளதால், கட்டுமான துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி தவிர்த்து, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில், மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரி 5ல் முடிந்தது.
இந்த ஊராட்சிகளில், தினசரி நிர்வாகப் பணிகளை கவனிக்க, தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பெரும்பாலானோர் பொறுப்பேற்றுள்ளனர்.
ஊராட்சிகளில் கட்டுமான திட்ட அனுமதி பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. ஆன்லைன் முறையில் பொது மக்கள் தாக்கல் செய்யும் விண்ணப்பங்களை பரிசீலித்து, அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, ஊராட்சி தலைவர் அல்லது பொறுப்பு அலுவலர் நிலையில் ஒப்புதல் தேவை.
இதில், ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும், யார் பொறுப்பான நபரோ, அவரது மொபைல் போனுக்கு, ஓ.டி.பி., எனப்படும் ரகசிய குறியீடு வரும். தற்போது, இந்த இடத்தில் தனி அலுவலர்களே பொறுப்பாளர்களாக வருகின்றனர்.
அவர்கள் தான், ஆன்லைன் திட்ட அனுமதியில், விண்ணப்பங்களை அடுத்த நிலைக்கு நகர்த்தும் பணிகளை செய்ய வேண்டும். அவர்கள் இப்பணிகளை துவக்காததால், ஆன்லைன் முறையில் கட்டட அனுமதி விண்ணப்பங்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளன.
இது குறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் பொறுப்பு ஏற்கும் நிலையில், நிர்வாக ரீதியாக சில மாறுதல்கள் செய்ய வேண்டும்.
அதை செய்யாமல், ஆன்லைன் கட்டட அனுமதி பணிகளை முடக்குவது நல்லதல்ல.
ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் யாரும் வெளியில் இருந்து வருவதில்லை. அந்தந்த துறையில், அதே மாவட்டத்தில் இருப்பவர்கள் தான் பொறுப்புக்கு வந்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள உதவி இயக்குனர்கள் விரைந்து செயல்பட்டால் இப்பிரச்னையை தவிர்க்கலாம். இதற்கான வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சி துறை விரைந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.