ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் மோதி தீ விபத்து தாய், மகள் உட்பட ஆறு பேர் பலி
ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் மோதி தீ விபத்து தாய், மகள் உட்பட ஆறு பேர் பலி
ADDED : டிச 26, 2025 02:09 AM
சித்ரதுர்கா: சித்ரதுர்கா அருகே ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி, இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்த கோர விபத்தில், தாய் - மகள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக இறந்தனர்.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, மத்திய - மாநில அரசுகள் தரப்பில், தலா 7 லட்சம் ரூபாய் நிவார ணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில் இருந்து, 'சீபேர்டு' என்ற டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்னி பஸ், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, உத்தர கன்னடாவின் கோகர்ணாவுக்கு, 30 பயணியருடன் புறப்பட்டது.
பெங்களூரு - புனே தேசிய நெடுஞ்சாலையில், கோர்லத்து கிராஸ் ஜவன்கொண்டனஹள்ளி பகுதிக்கு நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு பஸ் சென்ற போது, எதிர்திசையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பை இடித்து தள்ளி எதிர்திசைக்கு வந்து, சீபேர்டு நிறுவன ஆம்னி பஸ்சின் டீசல் டேங்கர் பகுதியில் மோதியது.
மோதிய வேகத்தில், பஸ் தீப்பிடித்தது. லாரியின் முன்பக்கமும் தீ பரவி எரிய ஆரம்பித்தது.
எது உண்மை? உடன் பஸ் டிரைவர் ரபீக், கிளீனர் முகமது சாதிக் ஆகியோர் பஸ்சில் தீப்பிடித்து விட்டது என்று கூச்சல் போட்டதால், பயணியர் அலறி அடித்து கொண்டு எழுந்தனர்.
டிரைவர் பக்கம் இருந்த கதவு வழியாகவும், அவசர கதவை திறந்தும் சிலர் வெளியே குதித்தனர். டிரைவரும், கிளீனரும் வெளியே குதித்து தப்பினர்.
பஸ் மீது லாரி மோதிய போது, ஏதோ குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டதால், கோர்லத்து கிராசில் வசித்து வரும் மக்களும் வெளியே வந்து பார்த்தனர்.
பஸ்சும், லாரியும் தீப்பிடித்து எரிவதை கண்டதும், விரைந்து சென்று பஸ்சுக்குள் இருந்தவர்களை மீட்கும் பணியில் இறங்கினர்.
இந்த சம்பவத்தில் தீயில் கருகி, 19 பேர் இறந்ததாக நேற்று காலையில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால், இதை மறுத்த ஐ.ஜி., ரவிகாந்தே கவுடா ஒன்பது பேர் இறந்ததாக கூறினார். ஆனால், போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி ஐந்து பேர் மட்டுமே இறந்ததாக கூறியதால், எது உண்மை என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், சித்ரதுர்கா எஸ்.பி., ரஞ்சித்குமார் பண்டாரு நேற்று மாலை அளித்த பேட்டி:
கோர்லத்து கிராஸ் பகுதியில் ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி, இரு வாகனங்களும் தீப்பிடித்த எரிந்த சம்பவத்தில், பஸ்சில் பயணம் செய்த பெண் குழந்தை கிரேயா, 6, அவரது தாய் பிந்து, 28, மற்றும் மானசா, 26, நவ்யா, 26, ராஷ்மி, 27 ஆகியோரும், லாரி டிரைவரான உத்தர பிரதேச மாநிலத்தின் குல்தீப்பும் உடல் கருகி இறந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் இரங்கல் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

