தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; திருப்பரங்குன்றம் வழக்கை டிச.,9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை
தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; திருப்பரங்குன்றம் வழக்கை டிச.,9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை
UPDATED : டிச 05, 2025 02:22 PM
ADDED : டிச 05, 2025 10:58 AM

நமது சிறப்பு நிருபர்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை, டிச.,9க்கு ஒத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
அரசு கோரிக்கை
இந்த வழக்கு விசாரணை இன்று (டிச.,05) காலை 10.45 மணிக்கு மீண்டும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
உத்தரவு
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமி நாதன் வழக்கு விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இன்னொரு வழக்கும் ஒத்திவைப்பு
இந்நிலையில், தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மாவட்ட கலெக்டர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். தனக்கு வாதிட 5 நிமிடம் அவகாசம் வேண்டும் என்று கோரினார். ஆனால், நீதிபதிகள், 'இப்போது யார் தரப்பு வாதத்தையும் கேட்க முடியாது. அனைத்து மேல் முறையீடுகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கிறோம்,' என்றனர்.
போலீஸ் கமிஷனர் தரப்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க கோரினார். ஆனால், அனைத்து தரப்பினரையும் கேட்காமல் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், அறநிலையத்துறை சார்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர்.
அரசு தரப்பில் வழக்கை டிச.,12க்கு ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை டிச.,12க்கு ஒத்தி வைத்தனர். அனைத்து வழக்கையும் விசாரித்து ஒரே தீர்ப்பாக வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடும் எச்சரிக்கை
''நீதிபதி மற்றும் தீர்ப்பை சிலர் விமர்சனம் செய்வதாக வக்கீல்கள் முறையிட்டனர். நீதிமன்றத்திற்கு வெளியே வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் வக்கீல்கள் தெரிவித்தனர். இதற்கு நீதிபதிகள் கூறியதாவது:
நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம். சமூக ஊடகங்களில் தேவையின்றி விமர்சனங்கள் செய்வதை, ஏற்றுக்கொள்ள முடியாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை விமர்சிக்கக் கூடாது.
மனுதாரர்கள் , எதிர்மனுதாரர்கள் ஐகோர்ட் மாண்பை கடைபிடிக்கும் வகையில் பேச வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

