இடைத்தேர்தலில் போட்டி: அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்
இடைத்தேர்தலில் போட்டி: அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்
ADDED : ஜன 20, 2025 06:24 AM

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க., நிர்வாகி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஈரோடு கிழக்கு சட்ட சபை தொகுதிக்கு, அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. வேட்பு மனு தாக்கல், கடந்த 17ம் தேதியுடன் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. மொத்தம் 55 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிட, ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் அணி இணை செயலர் செந்தில்முருகனும், மனு தாக்கல் செய்துள்ளார்.
அ.தி.மு.க., இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், செந்தில்முருகன் மனு தாக்கல் செய்தது, கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கடந்த 2023ல் பன்னீர்செல்வம் அணி சார்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னையில், பன்னீர்செல்வம் தரப்பினர் உத்தரவின்பேரில், மனுவை வாபஸ் பெற்றார். சில நாட்களில், பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைந்தார். அவருக்கு ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணை செயலர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கட்சி உத்தரவை மீறி, தற்போது அவர் மனு தாக்கல் செய்ததால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.