தமிழகத்தில் தொடர்ந்து முதலீடு: முகேஷ் அம்பானி பெருமிதம்
தமிழகத்தில் தொடர்ந்து முதலீடு: முகேஷ் அம்பானி பெருமிதம்
ADDED : ஜன 07, 2024 02:37 PM

சென்னை: '' ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. தமிழகம் எப்போதுமே தொழில், கலாசாரத்திற்கு சிறந்த மாநிலம். தமிழகத்தில் தொடர்ந்து முதலீடு செய்வோம்'' என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காணொளி வாயிலாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது.
ரூ.35 ஆயிரம் கோடி
தமிழகம் எப்போதுமே தொழில், கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம். 1300 சில்லறை விற்பனை அங்காடிகள் ரிலையன்ஸ் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், இங்குள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் இருக்கும் 35 மில்லியன் சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் புரட்சியின் மூலம் கிடைத்துள்ள பலன்களை வழங்குவோம்.
5ஜி தொழில்நுட்பம்
ஏஐ, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் அதிவிரைவாக 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்தது ஜியோ நிறுவனம். ரிலையன்ஸ் நிறுவனம் கனடாவின் Brookfield Assest Management மற்றும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட Digital Reality ஆகியவற்றுடன் கைக்கோர்த்து உலகத்தரத்தில் டேட்டா சென்டரை தமிழகத்தில் அடுத்த வாரம் திறக்க உள்ளது.
தமிழக அரசு ஆதரவு
தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும். நிலையான வளர்ச்சியை ஊக்குவித்து காலநிலை மாற்றத்தால் நமது பூமியை காக்க தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றுவோம். எங்களது கொள்கைகள் மூலம் எடுக்க இருக்கும் முன்னெடுப்புகளுக்கு தமிழக அரசின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.