ஒப்பந்ததாரர் தயவின்றி துார்வாரும் பணி: ரூ.100 கோடிக்கு இயந்திரங்கள் வாங்க முடிவு
ஒப்பந்ததாரர் தயவின்றி துார்வாரும் பணி: ரூ.100 கோடிக்கு இயந்திரங்கள் வாங்க முடிவு
ADDED : ஜூன் 28, 2025 02:53 AM

சென்னை: ஒப்பந்ததாரர் தயவு இல்லாமல், நீர்வழித் தடங்கள் மற்றும் நீராதாரங்களில் துார்வாரும் பணி மேற்கொள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பில் புதிய இயந்திரங்களை, நீர்வளத் துறை வாங்கவுள்ளது.
மாநிலத்தில் பாயும் 17 பெரிய ஆறுகள், அவற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள 90 அணைகள் நீர்வளத் துறை வாயிலாக பராமரிக்கப்படுகின்றன. மாவட்டங்களில் உள்ள 14,141 ஏரிகளும், நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ளன.
நீரோட்டம் அதிகரிப்பு
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், ஆறுகள், ஏரிகளின் உபரி நீர் கால்வாய்களில் நீரோட்டம் அதிகரிக்கிறது. இதில் பாசனம், குடிநீர் தேவைக்கு சேமித்தது போக, எஞ்சியுள்ள நீரை பாதுகாப்பாக கடலுக்கு வெளியேற்ற வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் நீர்வழித் தடங்கள் துார்வாரும் பணிக்கு, பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழையால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
பருவமழை காலத்தில் தேங்கும் நீரை வெளியேற்ற, கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு, ஆரணியாறு, வெள்ளாறு, கொள்ளிடம், பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித் தடங்களை துார்வாரும் பணிகள், 25 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.
டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ சாகுபடிக்கு திறக்கப்படும் காவிரி நீர், கடைமடை பகுதி வரை சென்று சேர்வதற்கு, அங்குள்ள நீர்வழித் தடங்கள், 120 கோடி ரூபாய் மதிப்பில் துார்வாரப்படுகின்றன.
இதேபோல, மதுரை, கோவை மண்டலங்களிலும் சிறப்பு துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு துார்வாரும் பணிக்கு மட்டும், 200 கோடி ரூபாய்க்கு மேல் நீர்வளத் துறை செலவிடுகிறது.
செலவு குறைப்பு
இதற்கென ஒப்பந்ததாரர் தேர்வு நடத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் செலவை குறைக்கும் வகையில், நீர்வளத் துறை வாயிலாக நேரடியாக துார்வார திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, 100 கோடி ரூபாய் மதிப்பில் பொக்லைன், சகதி வெளியேற்றும் இயந்திரம், லாரிகள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீர்வளத் துறை பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பு உள்ளிட்ட நெருக்கடியான நேரத்தில், ஒப்பந்ததாரர்களை தேடி அலைய வேண்டியுள்ளது.
எனவே, நீர்வளத் துறை வாயிலாகவே துார்வாரும் இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. இந்த ஓராண்டு மட்டும், ஒப்பந்த பணியாளர்களை நியமித்து, துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மதிப்பீடு தயாரிப்பு
பின்னர், துறைக்கு தேவையான பணியாளர்கள் படிப்படியாக நியமனம் செய்யப்படுவர். இவர்கள் வாயிலாக ஆண்டு முழுதும், நீர்வழித் தடங்கள் மட்டுமின்றி ஏரிகளும் துார்வாரப்படும்.
இதனால், அரசின் செலவு குறைவதுடன், பருவமழை காலங்களில் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நீர்வளத் துறை செயலர் ஜெயகாந்தன் வாயிலாக, அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.