ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு பேச்சு: திருப்பூரில் இயக்குநரால் எழுந்தது சர்ச்சை
ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு பேச்சு: திருப்பூரில் இயக்குநரால் எழுந்தது சர்ச்சை
ADDED : ஜன 26, 2025 03:17 AM

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில், ஆர்.எஸ்.எஸ்., குறித்து தவறாக பேசிய திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பனை கண்டித்து, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக, இதைத் தட்டிக்கேட்ட ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி தாக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், திருப்பூர் காங்கேயம் ரோட்டில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசினார்.
அதில், காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்., தான் என்றார். இதையறிந்து, அங்கு சென்ற ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி மோகன சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம், 'இதுபோன்று சர்ச்சையான பேச்சுகளை எப்படி அனுமதிக்கிறீர்கள்?' என்று, கேள்வி எழுப்பினர்.
இருதரப்பு இடையே வாக்குவாதம் எழுந்தது. கூட்டத்தில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியை தள்ளி விட்டார். வாக்குவாதம் முற்றியது. ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியை சிலர் சூழ்ந்து தாக்கினர். போலீசார் சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.
சர்ச்சை பேச்சு, தாக்குதல் குறித்து அறிந்த ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொதுச்செயலர் கிஷோர்குமார், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் தொண்டர்கள், காங்கேயம் ரோட்டில் இரவு, 11:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., குறித்து தவறாக பேசிய இயக்குநர் மீதும், நிர்வாகியை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போராட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினரிடம், போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தியும், போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இது தொடர்பாக சட்ட ரீதியாக அணுகுமாறும், போலீசில் புகார் கொடுக்கவும் தெரிவிக்கப்பட்டது.
மறியல் ஒரு புறம் நடக்க, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர், மறியலில் ஈடுபட்டவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி மறியலில் ஈடுபட்டனர். இருதரப்பினரிடம் பல கட்ட பேச்சு நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.
நள்ளிரவு போராட்டம் முடிவுக்கு வந்தது. சர்ச்சை பேச்சு, தாக்குதல் உள்ளிட்டவை குறித்து நேற்று ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., தரப்பில், திருப்பூர் தெற்கு போலீஸ் மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் புகார் அளித்தனர்.