தமிழ் பல்கலை பொறுப்பு துணைவேந்தர், பதிவாளர் போட்டி போட்டு ஆணை ெவளியிட்டதால் சர்ச்சை
தமிழ் பல்கலை பொறுப்பு துணைவேந்தர், பதிவாளர் போட்டி போட்டு ஆணை ெவளியிட்டதால் சர்ச்சை
ADDED : டிச 29, 2024 12:40 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், தமிழ் பல்கலையில், 2017 - -18ம் ஆண்டுகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் என, 40 பேர், உரிய கல்வித்தகுதி இல்லாமல் முறைகேடாக, அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரனால் பணி நியமனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான பொதுநல வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், 2021ம் ஆண்டு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட திருவள்ளுவன், 40 பேர் நியமனத்தில், தகுதி கான் பருவம் அடிப்படையில் நிரந்தர பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றது தொடர்பாக, கவர்னர் கேட்ட விளக்கத்திற்கு முறையான பதில் அளிக்காததால், திருவள்ளுவன் அக்., 20ல் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, பல்கலை பொறுப்பு துணைவேந்தராக தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கர் நியமிக்கப்பட்டார்.
இவர் பேராசிரியர், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அசாதாரண சூழலை உருவாக்கி வருவதால், பல்கலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சங்கருக்கு பதிலாக, பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதியை, துணைவேந்தர் பணிகளை கவனிக்கவும், ஆட்சிக்குழுவில் துணை வேந்தர் குழு நியமிக்கப்படும் வரை செயல்படுவார் எனக்கூறி, பொறுப்பு பதிவாளரான தியாகராஜன் ஆணை ஒன்றை பிறப்பித்தார்.
இதேபோல, பல்கலை பொறுப்பு துணைவேந்தர் சங்கரும் ஒரு ஆணையை வெளியிட்டார். அதில், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க இருப்பதால், தற்போது பொறுப்பு பதிவாளராக பணியாற்றும் தியாகராஜன், விசாரணை வரம்பிற்குட்பட்டு உள்ளார்.
இதை தவிர, நிர்வாக காரணங்களுக்காகவும் தியாகராஜனை பொறுப்பில் இருந்து நீக்கவும், அயல்நாட்டு தமிழ்க்கல்வி துறை இணைப்பேராசிரியர் வெற்றிச்செல்வனை, மறு ஆணை பிறப்பிக்கும் வரை அல்லது நிரந்தர பதிவாளர் பணி நியமனம் செய்யும் வரை பொறுப்பு பதிவாளராக நியமிப்பதாக ஆணையில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறாக பொறுப்பு துணை வேந்தர், பொறுப்பு பதிவாளர் மாற்றி, மாற்றி ஆணை பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து பல்கலை பணியாளர்கள் கூறியதாவது:
டிச., 24ம் தேதி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், ஆட்சிக்குழுக் கூட்டம் நடத்துவதற்கான கோப்பை நகர்த்துமாறு, தமிழ் வளர்ச்சித்துறை செயலர், பல்கலை பதிவாளரான தியாகராஜனிடம் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், துணைவேந்தர் பொறுப்பில் உள்ள சங்கர், அரசு செயலர் ஆலோசனை பெறாமல், பதிவாளர் பொறுப்பில் உள்ள தியாகராஜனை நீக்கினார்.
இச்சம்பவம் தமிழ் வளர்ச்சித்துறை செயலர் கவனத்திற்கு சென்ற நிலையில், பல்கலையில் பழைய நிலையே தொடரவும், இரு ஆணைகளையும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தெரிவித்தனர்.