25 ஆண்டாக தேடப்படும் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்
25 ஆண்டாக தேடப்படும் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்
UPDATED : ஏப் 30, 2025 05:53 AM
ADDED : ஏப் 30, 2025 05:52 AM

திருநெல்வேலி: சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கில் 25 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் குற்றவாளியின் திருநெல்வேலி வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணைக்காக சென்னை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் ஒட்டினர்.
திருநெல்வேலி மேலப்பாளையம் இப்ராஹிம் சாஹிப் தைக்கா தெருவை சேர்ந்த முகமது அப்துல்லா மகன் முகமது அலி (எ) மன்சூர் 45. இவர் தனது 19 வயதில் 1999ல் சென்னை, திருச்சி, கோவையில் வெடிகுண்டு வைத்த வழக்கு உள்ளது.
![]() |
கடந்த 25 ஆண்டாக தலைமறைவாக உள்ளார். எனவே மேலப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், பஸ்ஸ்டாண்ட், அவரது வீடு உள்ளிட்ட 5 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்மன் ஒட்டினர்.
அதில் வழக்கு தொடர்பாக மே 30 காலை 10:30 மணிக்கு சென்னை எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜராகி தனது விளக்கத்தை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இல்லையெனில் தலைமறைவாக உள்ள முகமது அலி விளம்பரப் படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என நீதித்துறை நடுவர் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது