ஊதிய உயர்வை தாமதிக்கவே ஐ.ஏ.எஸ்., அதிகாரி இடமாற்றம்; கூட்டுறவு பணியாளர்கள் எதிர்ப்பு
ஊதிய உயர்வை தாமதிக்கவே ஐ.ஏ.எஸ்., அதிகாரி இடமாற்றம்; கூட்டுறவு பணியாளர்கள் எதிர்ப்பு
ADDED : நவ 11, 2025 04:41 AM

சென்னை : 'ஊதிய உயர்வு வழங்குவதை தாமதம் செய்யவே, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்; விரைவாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்' என, அரசுக்கு கூட்டுறவு பண்டகசாலை பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், 45 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் உள்ளன. இவை, ரேஷன் கடை, மருந்தகம், பல்பொருள் அங்காடி போன்றவற்றை நடத்துகின்றன.
இவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டு ஏப்., முதல் புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அரசு தாமதம் செய்து வந்ததால், ஊதிய உயர்வு கேட்டு, ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் பணிக்கான கூடுதல் பதிவாளராக இருந்த அம்ரித், 15 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் கடந்த செப்டம்பரில் பேச்சு நடத்தினார்.
அவர், சமீபத்தில் வேறு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஊதிய உயர்வு வழங்குவதை தாமதம் செய்யவே, அவரின் பதவிக்கு புதிய அதிகாரியை நியமித்து உள்ளதாக, பணியாளர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, கூட்டுறவு பணியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக உள்ள நந்தகுமார் அறிவுறுத்தலின்படி, கூடுதல் பதிவாளர் அம்ரித் பேச்சு நடத்தினார். அக்டோபரில் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.
தற்போது உயரதிகாரிகளை சந்தித்து, ஊதிய உயர்வு வழங்குமாறு கேட்டால், 'கூடுதல் பதிவாளர் புதிய அதிகாரி; துறையை பற்றி முழுதுமாக அவர் தெரிந்து கொள்ள இரு மாதங்களாகும்; அதுவரை பொறுத்திருங்கள்' என்று கூறுகின்றனர்.
இம்மாத இறுதிக்குள் புதிய ஊதிய உயர்வைஅறிவிக்கவில்லை எனில், அனைத்து சங்கங்களின் பணியாளர்களும் ஒன்றிணைந்து, காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

