ADDED : ஆக 22, 2025 01:06 AM

மதுரை:மதுரை சிறையில் இருந்து பரோலில் சென்ற ஆயுள் கைதி 'எஸ்கேப்' ஆனார். அவரை, 20 நாள் தேடுதலுக்கு பின், மாறுவேடத்தில் சென்று சிறை காவலர்கள் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 45. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, மதுரை சிறையில் இருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஜூலை 26 முதல் 31 வரை பரோலில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவர், ஜூலை 31 மாலை சிறைக்கு திரும்பவில்லை. வீட்டில் பார்த்த போது, அங்கும் இல்லை.
சிறை டி.ஐ.ஜி., முருகேசன் உத்தரவுப்படி, கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, 20 நாட்களாக முத்துகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து தேடியது. இந்நிலையில், அவர், மதுரை தனக்கன்குளத்தில் உள்ள டீக்கடைக்கு தினமும் காலையில் வந்து செல்வதாக தகவல் கிடைத்தது.
நேற்று அதிகாலை சிறை காவலர்கள் கைலி, துண்டு அணிந்து கிராமத்தினர் போல் டீக்கடையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போல் முத்துகிருஷ்ணன் அங்கு வர, அவரை பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.