'கோர் இன்ஜினியரிங் கமிட்டி' மின்வாரியத்தில் புதிய அமைப்பு
'கோர் இன்ஜினியரிங் கமிட்டி' மின்வாரியத்தில் புதிய அமைப்பு
ADDED : மே 13, 2025 04:27 AM

சென்னை: மின் வினியோகத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண, தமிழக மின்வாரியத்தில் புதிதாக, 'கோர் இன்ஜினியரிங் கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள், புதிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உள்ளிட்டவை காரணமாக, தமிழக மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக, புதிய மின் நிலையங்கள், துணைமின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் அமைக்க வேண்டியுள்ளது.
இந்த பணிகளுக்கு, வாரிய தலைவரிடம் ஒப்புதல் பெறுகின்றனர். இந்த நடைமுறையில் முடிவு எடுப்பதற்கு தாமதமாகிறது.
எனவே, தொழில்நுட்பம் தொடர்பான பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண, 'கோர் இன்ஜினியரிங் கமிட்டி' எனப்படும் முக்கிய குழுவை, மின்வாரியம் அமைத்துஉள்ளது.
மின் பகிர்மான இயக்குநர் தலைமையில் செயல்படும் அக்குழுவில், ஆறு இயக்குநர்கள், ஏழு தலைமை பொறியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் வினியோகத்தில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன; அவற்றுக்கான தீர்வு தொடர்பாக, இக்குழு முடிவு எடுத்து, மின் வாரிய தலைவருக்கு பரிந்துரை செய்யும். குழு முடிவுக்கு, விரைந்து ஒப்புதல் பெறப்படும். இதன் வாயிலாக, மின் வினியோக பணிகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படும்.
உதாரணமாக, ஒரு இடத்தில் துணைமின் நிலையம், மின்வழித்தடம் அமைக்க வேண்டுமா என்பதை, முக்கிய குழு முடிவு எடுக்கும். அவசியம் என்று வாரிய தலைவருக்கு இக்குழு பரிந்துரை செய்தால், உடனே ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் துவக்கப்படும்.
மேலும், மின் வினியோகத்தில் விபத்து, மின் இழப்பை தடுக்க, புதிய மின் சாதனங்கள், புதிய தொழில்நுட்பங்கள், மற்ற மாநிலங்களில் இருந்தால், இக்குழு ஆய்வு செய்து அதை தமிழகத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.