கோரமண்டல் உரத் தொழிற்சாலை சுற்றுச்சூழல் இழப்பீடு தர ஒப்புதல்
கோரமண்டல் உரத் தொழிற்சாலை சுற்றுச்சூழல் இழப்பீடு தர ஒப்புதல்
UPDATED : பிப் 22, 2024 02:58 AM
ADDED : பிப் 22, 2024 02:40 AM

சென்னை:''சென்னை எண்ணுாரில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலை, சுற்றுச்சூழல் இழப்பீடாக, 5.92 கோடி ரூபாய் தர முன்வந்துள்ளது,'' என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
எண்ணுார் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில், சமீபத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது குறித்த, கவன ஈர்ப்பு தீர்மானத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ஜெகன்மூர்த்தி, எஸ்.எஸ்.பாலாஜி, வேல்முருகன், செல்வப்பெருந்தகை, சின்னதுரை, அருள், மாரிமுத்து ஆகியோர் பேசினர்.
'மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதால், ஆலையை மூட வேண்டும்' என வலியுறுத்தினர்.
அமைச்சர் மெய்யநாதன் அளித்த பதில்: உரத் தொழிற்சாலையில், கடந்த மாதம் 26ம் தேதி நள்ளிரவு, அமோனியா குழாய்களில் வாயு கசிவு ஏற்பட்டது; 20 நிமிடங்களில் கசிவு நிறுத்தப்பட்டது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழிற்சாலை மற்றும் குழாய் அமைந்துள்ள பகுதியை ஆய்வு செய்தனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம், உடனடியாக உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டது; தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஏழு பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு அமைத்தது. அக்குழு உடனடியாக ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது.
அமோனியா எடுத்து வரும் குழாய்கள், கடலுக்கு அடியில் இரண்டரை கிலோ மீட்டர் துாரம் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு பதிலாக புதிய குழாய்கள், அதிநவீன கண்காணிப்பு தானியங்கி கட்டுப்பாட்டு கருவி, முழு தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
விபத்து ஏற்படும்போது, விபத்தை தடுப்பதற்கான சாதனங்கள் அமைக்கப்பட வேண்டும். அமோனியா எடுத்துச் செல்லும் குழாய் உட்பட அனைத்து பகுதிகளிலும் கசிவு இருந்தால், உடனடியாக அமோனியா வினியோகம் நிறுத்தப்பட வேண்டும்.
மேலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, அமோனியாவை தொழிற்சாலைக்கு கொண்டு வருவது குறித்து, தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற, தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குழு பரிந்துரை அடிப்படையில், சுற்றுச்சூழல் இழப்பீடாக, 5 கோடியே 92 லட்சத்து 50,888 ரூபாயை ஏன் வசூலிக்கக் கூடாது என விளக்கம் கேட்டு, அந்நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தத் தொகையை கட்ட, அந்நிறுவனம் முன்வந்துள்ளது. தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ள அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தொழிற்சாலை மேற்கொள்வதை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்த பின், அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.