2 ஆண்டு காத்திருப்புக்கு பின் கிடைத்தது கொரோனா கால நர்ஸ்களுக்கு வேலை
2 ஆண்டு காத்திருப்புக்கு பின் கிடைத்தது கொரோனா கால நர்ஸ்களுக்கு வேலை
ADDED : டிச 03, 2024 12:26 AM
சென்னைகொரோனா காலத்தில் பணியாற்றிய நர்ஸ்களுக்கு, இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின், தற்போது அரசு மருத்துவமனைகளில் வேலை கிடைத்துள்ளது.தமிழகத்தில், 2020ல் கொரோனா காலத்தின் போது, தற்காலிக பணியில், 2,375 நர்ஸ்கள் நியமிக்கப்பட்டனர்.
வலியுறுத்தல்
அவர்கள், 2022 டிசம்பர், 31ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு துவக்கத்தில், 1,412 பேர் ஒப்பந்த அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
விடுபட்டவர்களுக்கும் பணி வழங்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்கு, நேற்று பலன் கிடைத்தது.
சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில், கொரோனா காலத்தில் பணிபுரிந்து மீண்டும் பணி நியமனம் செய்யப்படாமல் விடுபட்ட, 963 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
பணி நிரந்தரம்
இதுதவிர, தொகுப்பூதிய அடிப்படையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த, 1,200 பேருக்கு பணி நிரந்தர ஆணையையும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.
பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மருத்துவ துறையில், பல்வேறு நிலைகளில், 20,440 பேருக்கு வெளிப்படை தன்மையுடன், பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
''அதேபோல, காலியாக உள்ள, 2,553 டாக்டர்கள்; 2,250 சுகாதார செவிலியர்கள்; 1,066 சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட, 6,714 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என்றார்.