தமிழகத்தில் பூஜ்ஜிய நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் பூஜ்ஜிய நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு
ADDED : டிச 21, 2024 07:57 PM
சென்னை:உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு, தமிழகத்தில் பூஜ்ஜிய நிலையை அடைந்தது.
தமிழகத்தில், 2020 மார்ச்சில் துவங்கிய கொரோனா பாதிப்பால், இதுவரை, 36.12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மூன்று அலைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவால், 2020ல் அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதத்தில், 3,387 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல, 2021ல் அதிகபட்சமாக மே மாதத்தில், 10,186 பேர் என மொத்தம், 38,086 பேர் இறந்துள்ளனர்.
கடந்த, 2023 பிற்பகுதியில் இருந்து குறைய துவங்கிய கொரோனா பரவலால், அவ்வப்போது ஓரிருவர் பாதிக்கப்பட்டு வந்தனர். உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும், சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிருவர் பாதிக்கப்படுவது தொடர்ந்து வந்தது.
அதன்படி, சென்னையை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்று, தற்போது குணமடைந்தார். அதனால், கொரோனா பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளது.
அறிகுறி கண்டறியப்பட்ட, 32 பேருக்கு நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.