அஜித்குமாரை அடித்தே கொன்றனர்: முதல் தகவல் அறிக்கையில் திருத்தம்
அஜித்குமாரை அடித்தே கொன்றனர்: முதல் தகவல் அறிக்கையில் திருத்தம்
UPDATED : ஆக 08, 2025 12:09 PM
ADDED : ஆக 08, 2025 07:03 AM

திருப்புவனம்: 'கோவில் காவலாளி அஜித்குமாரை, மூர்க்கத்தனமாக தாக்கினால், மரணம் ஏற்படும் என, தெரிந்தே, அவரை தனிப்படை போலீசார் தாக்கி உள்ளனர்' என, முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், 27, என்பவரை, நகை திருட்டு தொடர்பாக, தனிப்படை போலீசார் ஐந்து பேர் அடித்து கொன்றனர். திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவில், வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் இறந்து விட்டதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால், கூடுதல் எஸ்.பி., சண்முகம் நடத்திய விசாரணையில், தனிப்படை போலீசார் ஐந்து பேர் மூர்க்கத்தனமாக தாக்கி, மரணத்தை ஏற்படுத்தி குற்றம் புரிந்துள்ளனர் என, தெரியவந்தது.
இந்த தகவல்களுடன், எப்.ஐ.ஆர். எனும் முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதையே, சி.பி.ஐ., அதிகாரிகளும் வழக்காக பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, அஜித்குமார் கொலை வழக்கில் கைதான தனிப்படை போலீசார் ஐந்து பேரையும், இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, மடப்புரம் கடையில் மிளகாய்பொடி வாங்கி, அதை அஜித்குமார் மீது துாவி சித்ரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சி.பி.ஐ., அதிகாரிகள், மடப்புரத்தில் உள்ள கடைக்காரரிடம் நேற்று விசாரணை நடத்தினர். கடைக்காரர், தனிப்படை போலீசார் ஒரு பாக்கெட் மிளாய் பொடி மற்றும் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
அஜித்குமாரை போலீசார் தாக்கிய போது வீடியோ எடுத்த வாலிபரையும், அவரது வழக்கறிஞர் ஆகியோரிடமும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.