மாநிலங்களுக்கு 88.40 லட்சம் 'பேல்' பஞ்சு இந்திய பருத்தி கழகம் விற்பனை
மாநிலங்களுக்கு 88.40 லட்சம் 'பேல்' பஞ்சு இந்திய பருத்தி கழகம் விற்பனை
ADDED : செப் 29, 2025 11:17 PM

திருப்பூர் : நடப்பு பருத்தியாண்டில், 310.78 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய பருத்தி கழகம், 100 லட்சம் பேல் கொள்முதல் செய்து, 88.40 லட்சம் பேல் விற்பனை செய்துள்ளது.
அக்., 2024 - செப்., 2025 வரையிலான நடப்பு பருத்தி ஆண்டில் கடந்த 26ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 310.78 லட்சம் பேல் விற்பனைக்கு வந்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 90.75 லட்சம் பேல்; குஜராத்தில் 77.43 லட்சம் பேல், தெலுங்கானாவில் 48.56 லட்சம் பேல் விற்பனை நடந்துள்ளது.
விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், இந்திய பருத்தி கழகமான சி.சி.ஐ., 100 லட்சம் பேல் கொள்முதல் செய்து இருப்பு வைத்தது.கடந்த ஜூலை மாத இறுதி வரை, மிக குறைவான அளவு பஞ்சு மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதற்கிடையில், பஞ்சு இறக்குமதிக்கான வரி 11 சதவீதத்தை, டிச., மாதம் இறுதி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இறக்குமதி அதிகரித்து பஞ்சு விலை குறையவும் வாய்ப்புள்ளதால், இந்திய பருத்தி கழகம் இருப்பு வைத்திருந்தது. கடந்த 26ம் தேதி நிலவரப்படி, 88 லட்சத்து 40,900 பேல் விற்பனை நடந்துள்ளதாக சி.சி.ஐ., அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''தமிழக நுாற்பாலைகள், சி.சி.ஐ.,யிடமிருந்து பஞ்சு வாங்குவதில்லை. குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா சந்தைகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்துள்ளன.
சி.சி.ஐ., மூலமாக, வாரம் 22,000 பேல் வரை சராசரியாக விற்பனை நடந்து வருகிறது. பருத்தி ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது; அக்., 1 முதல் புதிய பருத்தி ஆண்டு துவங்குகிறது; அடுத்த இரண்டாவது வாரத்தில் இருந்து புதிய பஞ்சு விற்பனைக்கு வரத் துவங்கும்,'' என்றார்.