இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் சொத்து முடக்கம்
இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் சொத்து முடக்கம்
ADDED : டிச 04, 2025 05:55 AM

சென்னை: இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த, இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரின் 2.04 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து உட்கொண்டு, மத்திய பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதற்கு காரணமாக இருந்த, இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரை, ம.பி., போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ரங்கநாதன் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து, அமலாக்கத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ர ங்கநாதன் மீது ம.பி., போலீசாரும், தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரும் பதிவு செய்த வழக்குகள் அடிப்படையில், அவர்கள் தொடர்பான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனையில், உற்பத்தி செலவை குறைத்து, லாபத்தை அதிகரிக்க, முறைகேடான உற்பத்தி நடைமுறைகளை பின்பற்றியதும், அதன் வாயிலாக ரங்கநாதன் சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் சம்பாதித்ததும் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறையினர் ரங்கநாதனுடன் நேரடி தொடர்பில் இருந்ததுடன், சட்ட விரோத செயலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர்; ஆண்டு தோறும் நடத்த வேண்டிய ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை.
சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, சென்னை கோடம்பாக்கத்தில், ரங்கநாதன் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 2.04 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

