முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 20, 2024 04:11 PM
ADDED : ஜூன் 20, 2024 12:30 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்திற்கு தார்மிக பொறுப்பு ஏற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் '' என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தார்.
அனைவரும் ஏழைகள்
பிறகு அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் கொடி கட்டி பறக்கிறது. நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. கருணாபுரத்தில் முக்கிய அலுவலகங்கள் இருந்தும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. இறந்தவர்கள் அனைவரும் ஏழைகள். போலீஸ் ஸ்டேசன் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால், அரசின் நிர்வாக திறமையை எண்ணிப்பார்க்க வேண்டும்
இதற்கு பின்னாள் பெரிய கும்பல் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிகாரமிக்கவர்கள் இதில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் தான் போலீஸ் ஸ்டேசன் அருகே கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது. இல்லாவிட்டால், பெரிய கள்ளச்சாராய விற்பனை நடக்குமா?
சிபிசிஐடி
இந்த சம்பவம் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் கிடைத்து இருந்தால் அரசு நடவடிக்கை எடுத்து இருக்கும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருள் விற்பனை தடையின்றி நடப்பதாக கள்ளக்குறிச்சி எஸ்பி.,யிடம் அதிமுக எம்எல்ஏ., போனிலும் நேரிலும் புகார் தெரிவித்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது. கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடுகிறது. நாமக்கல்லில் குடோனில் வைத்து திமுக பிரமுகர் கள்ளச்சாராயம் விற்கிறார். புகார் அளித்ததும், அவரை கைது செய்யாமல், அங்கு வேலை செய்த வட மாநிலத்தவரை கைது செய்கின்றனர்.
பதவி விலக வேண்டும்
மரணத்திற்கு காரணம் முதல்வரின் நிர்வாக திறமையின்மை. திமுக நிர்வாகிகள் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளனர். இவ்வளவு மரணத்திற்கு காரணமான நிர்வாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
விக்கிரவாண்டி சட்டசபை தேர்தல் நடக்கிறது. பூத் வாரியாக, ஒன்றியத்துக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த அக்கறையை கள்ளக்குறிச்சியில் காட்டி இருக்கலாம். கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் உயிரிழக்கின்றனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்து இருந்தால் பலரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால், மக்களை பற்றி முதல்வருக்கு அக்கறை இல்லை.
கள்ளச்சாராயத்தினால் யாரும் இறக்கவில்லை என மாவட்ட கலெக்டர், பச்சை பொய் சொல்கிறார். அரசுக்கு முட்டுக் கொடுக்கிறார். பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும். மாநிலத்தில் அரசே செயல்படவில்லை. திமுக ஆட்சியில் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
மாதம் ரூ.5000
கள்ளச்சாராய விவகாரத்தில் பெற்றோர்களை இழந்த ஒரே குடும்பத்தை சார்ந்த 3 குழந்தைகளின் கல்விச் செலவை அ.தி.மு.க., ஏற்கும். அந்த குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க., சார்பில் மாதந்தோறும் ரூ.5000 வழங்கப்படும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.
நேரில் ஆறுதல்
இதனைத்தொடர்ந்து உயிரிழந்தோரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். கருணாபுரத்தில் உள்ள பல தெருக்களிலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் நிலையில், ஒவ்வொரு வீடாக சென்று உயிரிழந்தோரின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு, குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல் கூறினார்.