ADDED : டிச 05, 2025 06:14 AM

தஞ்சாவூர்: டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி, 35 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு பெற்று ஏமாற்றிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், வழுத்துாரை சேர்ந்தவர் மர்ஜித் அலி, 44. இவரது மனைவி ஹவாபீவி, 40. தம்பதியர், 2016ம் ஆண்டு, மர்ஜித் என்ற பெயரில், டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை துவக்கி நடத்தினர்.
இந்நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும், 2,500 ரூபாய் லாப தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
இதை நம்பி, 1,000 முதலீட்டாளர்கள் பணம் செலுத்தினர். 2019ம் ஆண்டுக்கு பின், லாப தொகையை வழங்காமல், 35 கோடி ரூபாய் அளவுக்கு மேல் மோசடி செய்து, தம்பதியினர், 2021ல் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்ட 400 பேர், போலீசில் புகார் அளித்தனர்.
தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தம்பதியை தேடி வந்த நிலையில், மதுரை அருகே கப்பலுாரில் நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'தம்பதியின் சொத்துக்களை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மர்ஜித் டிரான்ஸ்போர்ட் நிறுவன மோசடி தொடர்பாக, பணம் செலுத்தி ஏமாந்தவர்கள், தஞ்சாவூர், ரெட்டிபாளையம் சாலை, ஸ்ரீராம் நகரில், உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம்' என்றனர்.

