UPDATED : பிப் 22, 2024 03:10 AM
ADDED : பிப் 22, 2024 02:49 AM

சென்னை:சென்னை அடையாறு காந்தி நகரில், 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ், செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்ற நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
இந்நிறுவனங்கள், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பதிவு செய்த வழக்கில், 'சுபிக்ஷா' நிறுவன இயக்குனர் ஆர்.சுப்ரமணியனுக்கு, கடந்தாண்டு நவம்பரில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், சுபிக்ஷா சுப்ரமணியன் சார்பில் தாக்கல் செய்த மனுவில், 'எனக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
'இவற்றில் சில வழக்குகளில், நானே வாதிட அனுமதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எந்தெந்த வழக்குகளில் மனுதாரர் தானே வாதிட விரும்புகிறார் என்ற விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல், 3க்கு தள்ளி வைத்தனர்.
மேலும், மனுதாரரை, வாதிட அனுமதிப்பதாக இருந்தால், சிறையில் இருந்தே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வாதிட அனுமதிக்கலாம்.
'வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகி வாதிட, சிறைத்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்; அதற்கு நீதிமன்ற உத்தரவு அவசியமில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.