ஐ.பி.எஸ்., அதிகாரி டேவிட்சன் மீதான வழக்கை முடித்து வைத்தது கோர்ட்
ஐ.பி.எஸ்., அதிகாரி டேவிட்சன் மீதான வழக்கை முடித்து வைத்தது கோர்ட்
ADDED : அக் 08, 2025 03:51 AM
சென்னை:போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஐ.பி.எஸ்., அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது விசாரணை நடத்த கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.
மதுரை போலீஸ் கமிஷனராக, டேவிட்சன் தேவாசிர்வாதம் இருந்தபோது, போலி ஆவணங்கள் வாயிலாக, அவரது மனைவி சுனிதா டேவிட்சன் நடத்திய 'டிராவல்ஸ்' நிறுவனம் வாயிலாக, பலருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மீண்டும் விசாரணை இவ்விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'குற்றச்சாட்டு குறித்து மதுரை 'கியூ பிராஞ்ச்' மூன்று மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்; எஸ்.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., விசாரணையை கண்காணிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
இந்நிலையில், 'போலி பாஸ்போர்ட் வழக்கு தாமதப்படுத்தப்படுகிறது. கூடுதல் டி.ஜி.பி., மீது துறை ரீதியாக நடவடிக்கை கோரிய புகார் மனு மீது, எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, முதல்கட்ட விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால், கூடுதல் டி.ஜி.பி.,க்கு எதிராக நடவடிக்கை எடுக்க, தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்' என, சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வாராகி என்பவர், கடந்த 2023ல் வழக்கு தொடர்ந்தார்.
மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''இந்த விவகாரத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எவ்வித தொடர்புமில்லை எனக் கூறி, நற்சான்று அளித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உ ள்ளது.
''மனுதாரரின் கோரிக்கை மனு மீது, ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டு, புகாரில் முகாந்திரம் இல்லை என முடிவுக்கு வந்து, அந்த விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது.
''உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்படி, ஐந்து காவல்துறையினர் உட்பட 59 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குற்றச்சாட்டு பதிவுக்காக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
குற்றப்பத்திரிகை இதை பதிவு செய்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ள நிலையில், போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என தெரிவித்து, வாராகி தாக்கல் செய்த பொது நல வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.