செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிப்பு
ADDED : ஏப் 30, 2024 02:51 PM

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 36வது முறையாக ஜூன் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வங்கி சார்பில், அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இது மனுவை விசாரித்த, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மனு மீதான விசாரணை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காவல் நீட்டிப்பு
இதற்கிடையே, காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 36வது முறையாக நீதிமன்ற காவலை ஜூன் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

