நியமன உத்தரவின்றி அதிகாரிகள்; அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
நியமன உத்தரவின்றி அதிகாரிகள்; அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஜன 20, 2024 05:06 AM
ADDED : ஜன 19, 2024 11:56 PM

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், மயிலாப்பூரைச் சேர்ந்த, டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் பல கோவில்களில், நிர்வாக அதிகாரிகளாக அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 47 கோவில்களில் பணிபுரியும் நிர்வாக அதிகாரிகளுக்கு நியமன உத்தரவு இல்லை.
அதனால், இவர்களின் பணிக்காலம் எவ்வளவு என்று தெரியவில்லை. உரிய உத்தரவுகளுடன் நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றினாலும், அது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது.
எனவே, நியமன உத்தரவு இன்றி, கோவில்களில் நிர்வாக அதிகாரிகள் இருப்பது சட்டவிரோதமானது. ஐந்து ஆண்டுகள் வரை நிர்வாக அதிகாரிகளை, ஆணையர் நியமிக்கலாம் என்பது சரியல்ல.
சட்டவிரோதமாக நிர்வாக அதிகாரிகள் இருப்பது, கோவில்களை தவறாக நிர்வகிக்க வழிவகுக்கும். இவர்களை அகற்றிவிட்டு, அறங்காவலர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்களுக்கு நியமிக்கப்படும் அறங்காவலர்கள் வசம், நிர்வாகத்தையும், கோவில் சொத்துக்களையும் ஒப்படைக்க வேண்டும். தினசரி பூஜை, சடங்குகள், சம்பள பட்டுவாடா, கோவில் பொது பராமரிப்பு தவிர்த்து, நிர்வாக முடிவுகளை எடுக்க, நிர்வாக அதிகாரிகளாக பணியாற்றுபவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, வழக்கறிஞர் அபினவ் பார்த்தசாரதி ஆஜராகினர். அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.
மனு குறித்து, அரசு தரப்பில் அறிக்கை அளிக்க முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச்சுக்கு தள்ளி வைத்தது.