தனியார் நிறுவனத்துக்கு 'டெண்டர்' அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
தனியார் நிறுவனத்துக்கு 'டெண்டர்' அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
UPDATED : பிப் 23, 2024 03:16 AM
ADDED : பிப் 23, 2024 02:17 AM

சென்னை: சென்னை எண்ணுாரில், அனல் மின் நிலையம் விரிவாக்கத்துக்காக, தனியார் நிறுவனத்துக்கு, 'டெண்டர்' ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுவுக்கு, அரசு மற்றும் மின் வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
எண்ணுாரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தில், 660 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள கூடுதல் அலகு அமைப்பதற்காக, 2019ல் தமிழக மின் வாரியம் டெண்டர் கோரியது.
குறைவான தொகை
இதில் பங்கேற்ற மத்திய அரசின், 'பெல்' நிறுவனம், 4,957 கோடி ரூபாய்க்கும், 'பி.ஜி.ஆர். எனர்ஜி சிஸ்டம்ஸ்' என்ற தனியார் நிறுவனம், 4,442 கோடி ரூபாய்க்கும் டெண்டர் கோரின. குறைவான தொகையை குறிப்பிட்ட பி.ஜி.ஆர்., நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது.
உத்தரவாத தொகையை பி.ஜி.ஆர்., நிறுவனம் செலுத்தாததால், டெண்டர் ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்து, 2021 ஏப்ரலில் மின் வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பி.ஜி.ஆர்., நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
'மீண்டும் டெண்டர் கோரக்கூடாது; தற்போதைய நிலை தொடர வேண்டும்' என, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் பி.ஜி.ஆர்., நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கி, 2022 மார்ச்சில் மின் வாரியம் உத்தரவிட்டது.
இதில், முறைகேடு நடந்துள்ளதாகவும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், திருச்சி, ராணிப்பேட்டை, திருமயத்தைச் சேர்ந்த பெல் நிறுவன தொழிற்சங்கங்கள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஏற்புடையது அல்ல
வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ் ஆஜரானார்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''பல திட்டங்களை, பி.ஜி.ஆர்., நிறுவனம் செயல்படுத்தி உள்ளது. சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல,'' என்றார்.
மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசு, மின் வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஏப்ரல் 10க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.