ADDED : நவ 06, 2025 12:46 AM
சென்னை: தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், போக்குவரத்து வசதியில்லாத கிராமங்களுக்கு, போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில், புதிய மினி பஸ் திட்டத்தை, மாநில அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.மாலா, ''கிராமப்புறங்களில் சாலை வசதிகள் மோசமான நிலையில் உள்ளன. இதனால், அத்தகைய பகுதிகளில் வழக்கமான பஸ்களை இயக்குவது கடினம்.
''இதை கருத்தில் வைத்து, கிராமப்புற மக்களுக்கும், கடைசி மைல் வரை, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவே, மினி பஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
''தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள், ஏற்கனவே பஸ்களை இயக்கி வரும் நிலையில், புதிய மினி பஸ் திட்டத்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை,'' எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் சார்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''திட்டம் ஏற்கனவே அமலுக்கு கொண்டு வரப்பட்டு, 1,350 பஸ்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. விரைவில் அனுமதி வழங்கப்படும்,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தனர்.
மேலும், பஸ்களுக்கு உரிமம் வழங்கியது என்பது, இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக் கூறி, விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 3வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

