ADDED : ஜன 25, 2024 03:54 AM

எஸ். மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ராமர் கோவில் திறப்பு நாளில், கோவில்களில் அன்னதானம் வழங்கவும், கோவில் திறப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும் தடை விதித்து, தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது; இது, நுாற்றுக்கு நுாறு உண்மை.
ஆனால், 'அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட, 'தினமலர்' நாளிதழ் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாதாரணமாக காவல் நிலையங்களில், புகார் கொடுக்க வருவோர் மீதே வழக்கு பதிந்து, குற்றவாளியாக்கும் முயற்சி நடைபெறும். அந்த வேலையை, தற்போது தமிழக அரசே மேற்கொண்டு அச்சுறுத்துகிறது.
குரங்குகளிடம் ஒரு பழக்கம் உண்டு... குரங்கின் முன் சூடான சாதத்தை தட்டில் வைத்தால், தாய் குரங்கு உடனே கை வைக்காமல், மடியில் இருக்கும் குட்டியின் கையை நைஸாக எடுத்து, சூடான சோற்றின் உள்ளே திணிக்கும். சூடு தாங்காமல், குரங்கு குட்டி கத்தும் போது, 'ஆஹா... சோறு சூடாக உள்ளது. அதில் நாம் கை வைத்து சூடு பட்டு விடக்கூடாது' என்று தீர்மானிக்கும்.
அதுபோல, அயோத்தியில் நடந்த ஸ்ரீராமர் பிராண பிரதிஷ்டைக்கு, தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் நேரடியாக அரசே அனுமதி மறுத்தால், ஹிந்துக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
அதனால், வாய்மொழியாக உத்தரவிட்டு அது, 'வொர்க் அவுட்' ஆனால் ஹிந்துக்கள் அடிபணிந்து பயந்து நடுங்கி விட்டனர் என்று, காலரை துாக்கி விட்டு கொள்ளலாம் என்ற கோணத்தில், ஒரு வாய்மொழி தடை உத்தரவை பிறப்பித்து, நுால் விட்டுப் பார்த்து இருக்கிறது. ஆனால் அதை, 'தினமலர்' நாளிதழ் செய்தியாக்கி, மக்களும் கொதித்து எழுந்ததால், தற்போது வழக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தமிழகம் முழுதும் நேரடி ஒளிபரப்பு செய்யவும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் அனுமதி கோரி, ஹிந்து அமைப்புகள் கொடுத்த கடிதங்களுக்கு, பல்வேறு காரணங்களை கூறி அனுமதி மறுத்த போலீஸ் அதிகாரிகள், தமிழகத்தில் தானே பணிபுரிகின்றனர். அவர்கள் எழுத்துபூர்வமாக அளித்த மறுப்பு கடிதங்கள் தான் ஆதாரங்களாக இருக்கிறதே...
அதன்பின்னரும், 'நாங்கள் அப்படி எந்த தடையும் பிறப்பிக்கவில்லை' என, திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பசப்புவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமானது.