அவசர கிகிச்சை பயணத்துக்கு 'தொட்டில்'; அதுவே ஆம்புலன்ஸ் வால்பாறை காட்டில்!
அவசர கிகிச்சை பயணத்துக்கு 'தொட்டில்'; அதுவே ஆம்புலன்ஸ் வால்பாறை காட்டில்!
ADDED : ஆக 26, 2025 07:51 AM

வால்பாறை: எத்தனையோ நவீனங்கள் வந்தாலும், தமிழகத்தின் பல பகுதிகளில், பழங்குடியினர் மருத்துவமனைக்கு போகக்கூட முறையான பாதை கிடையாது என்பதே உண்மை. மலையில் இருந்து நோயாளியை தொட்டில் கட்டி ஒன்றரை கி.மீ., துாக்கிச் சென்ற அவலம் வால்பாறையில் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறையில், கல்லார்குடி, சங்கரன்குடி, உடுமன்பாறை, பாலகணாறு, நெடுங்குன்றம் உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட் பகுதிகளில் பழங்குடியினர் வசிக்கின்றனர். சாலை வசதி இல்லாததால் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் போது கடும் துயரத்துக்கு ஆளாகின்றனர். உடுமன்பாறை காடர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ், 58, உடல் நலம் பாதித்து எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வால்பாறையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி 1.5 கி.மீ., துாரம் துாக்கி சென்றனர். அதன்பின் ஆம்புலன்ஸ்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பழங்குடியினர் கூறுகையில், 'உடுமன் பாறையில் அடிப்படை வசதிகள் இல்லை. நடைபாதை, சாலை இல்லாததால் நோயாளி, கர்ப்பிணி பெண்களை 'டோலி' கட்டியே துாக்கிச் செல்கிறோம். கலெக்டர் முதல், முதல்வர் வரை மனு கொடுத்தும் பயனில்லை. எங்கள் ஓட்டு வேண்டும்; ஆனால் கண்டுகொள்வதில்லை. ஓட்டுப்போடும் வரை நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமே, அதற்காகவாவது அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டாமா. என்ன செய்வது... ஆட்சிகள் மாறினாலும், எங்கள் நிலை மாறுவதில்லை' என்றனர்.
இதுகுறித்து வன அலுவலர் கிரிதரனிடம் கேட்டபோது, ''உடுமன்பாறை செட்டில்மென்ட் பகுதிக்கு மக்கள் நடந்து செல்லும் வழித்தடம் பள்ளத்தில் உள்ளது. ரோடு அமைப்பது சாத்தியமில்லை. வனத்துறைக்கு முறையாக விண்ணப்பித்தால், அது குறித்து உரிய நடைமுறைகளின்படி பரிசீலிக்கப்படும்,'' என்றார்.