கொத்தனார் வெட்டி கொலை
திருவாரூர்: திருவாரூர் அருகே, அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார், 30; கொத்தனார். நேற்று முன்தினம் இரவு, அம்மையப்பன் கடைவீதியில் அதே ஊரை சேர்ந்த காளிதாஸ், 32, பெரியகாளி, 32, ஆகியோருடன் நந்தகுமார் பேசிக்கொண்டு இருந்துள்ளார். செப்., 2023ல் நடந்த கொலை வழக்கு ஒன்றில், காளிதாஸ், பெரியகாளி இருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. திடீரென, ஆறு பேர் கும்பல், காளிதாஸ், பெரியகாளியை அரிவாளால் வெட்ட முயன்றது. இருவரும் தப்பிய நிலையில், நந்தகுமாரை வெட்டியதில், அவர் அதே இடத்தில் இறந்தார். கொரடாச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆடு திருடிய வக்கீல் கைது
வாணியம்பாடி: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி புதுார் அம்பலால் நகரை சேர்ந்தவர் அஞ்சலை, 45. செப்., 14ம் தேதி அஞ்சலை, அதே பகுதியில் உள்ள வழக்கறிஞர் சுல்தான் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், தன் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டார். அப்போது, ஒரு செம்மறி ஆடு மாயமானது. அப்பகுதி மக்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சுல்தான், தன் நண்பர் திருமலையுடன் சேர்ந்து, ஆட்டை காரில் திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. சுல்தான், திருமலை ஆகியோரை நேற்று முன்தினம் வாணியம்பாடி டவுன் போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
ரூ.8 லட்சம் கஞ்சா பறிமுதல்
ராமேஸ்வரம்: இலங்கை யாழ்ப்பாணம் கடலில் மிதந்த 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை யாழ்ப்பாணம் மாமுனை கடற்கரையில் மிதந்து வந்த ஒரு மூட்டையை அந்நாட்டு கடற்படை வீரர்கள் பறிமுதல் செய்து சோதனையிட்டனர். இதில் 15 பார்சல்களில் 33 கிலோ கஞ்சா இருந்தது. மேல்விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனை தமிழகத்தின் நாகை, வேதாரண்யம் கடற்கரையில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் கடத்தல்காரர்கள் கடத்தி வந்து இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்து இருக்கலாம். பின் கடற்படை ரோந்து படகை பார்த்ததும் கஞ்சா மூட்டையை கடலில் துாக்கி வீசிவிட்டு தப்பி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதன் மதிப்பு 8 லட்சம் ரூபாய்.
மாணவியிடம் ஆபாச பேச்சு: பேராசிரியர் கைது
திருச்சி: மாணவியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி அருகே மணிகண்டம், இந்திரா கணேசன் தனியார் கல்லுாரியில், 17 வயதுடைய மாணவி முதலாண்டு படிக்கிறார். அந்த மாணவியிடம், அதே கல்லுாரி பேராசிரியர், திருச்சி கே.கே.நகரை சேர்ந்த தமிழ், 53, என்பவர் செப்., 13ல், ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவி புகாரின்படி, பேராசிரியர் தமிழை திருவெறும்பூர் போலீசார் நேற்று போக்சோவில் கைது செய்தனர்.
சில்மிஷ தாத்தாவுக்கு '22 ஆண்டு'
புதுக்கோட்டை: பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தாவுக்கு, மகளிர் நீதிமன்றம், 22 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில், கடந்த 2022ம் ஆண்டு, 9 வயது பேத்தியை, அவரது தாத்தா முகமனு கனி, 62, என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெற்றோர் புகாரின்படி, அறந்தாங்கி மகளிர் போலீசார் முகமது கனியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம், நேற்று, முகமது கனிக்கு, 22 ஆண்டு சிறை தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
தொழிலாளி வெட்டி கொலை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த அக்குள் கொள்ளையை சேர்ந்தவர் மாதப்பன், 35; கூலித்தொழிலாளி. நேற்று மாலை சித்தப்பனுார் அருகே சென்ற மாதப்பனை, தொட்டமஞ்சு கொள்ளையை சேர்ந்த மாரப்பன் என்பவர் வழிமறித்து, அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பினார். அஞ்செட்டி போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.