கிரைம்: மகளின் தாலியை அறுத்து காரில் கடத்திய பெற்றோர்
கிரைம்: மகளின் தாலியை அறுத்து காரில் கடத்திய பெற்றோர்
ADDED : ஜன 20, 2024 07:17 AM

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொல்லகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் நர்மதா, 23. இவர், அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் தியாகு, 23, என்பவரை, கடந்த மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். மணமக்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்.
நர்மதா, அவரின் பெற்றோர் எதிர்ப்பை மீறி, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த நர்மதாவின் தந்தை ராஜேந்திரன், 'மகளை காணவில்லை' என அம்பலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, நர்மதாவை கண்டுபிடித்து கடந்த, 7ம் தேதி வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நர்மதா, தன் கணவருடன் செல்வதாக கூறி சென்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன், பொங்கல் பண்டிகை கொண்டாட, நர்மதா மற்றும் அவரது கணவர் தியாகு, ஆகியோர் பூர்வீக கிராமமான சங்கராபுரம் சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த போது, கடந்த, 17ம் தேதி இரவு, நர்மதாவின் குடும்பத்தினர் தியாகு வீட்டிற்குள் நுழைந்து, வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்து நர்மதாவின் தாலியை அறுத்து வீசி, அவரை காரில் கடத்தி சென்றனர்.
செய்வதறியாது திகைத்த தியாகு, அம்பலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்மதாவை கடத்தி சென்ற அவரது அண்ணன், பெற்றோர் மற்றும் நர்மதாவை தேடுகின்றனர்.
5 மாத பெண் குழந்தையை பஸ்சில் விட்டு சென்ற தாய்
திருச்சியை சேர்ந்த திவ்யா, 26. இவர் கோவையில் தங்கி ஆடிட்டர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவர் நேற்று காந்திபுரத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு தனியார் பஸ்சில் சென்றார். கூட்டமாக இருந்ததால், அடையாளம் தெரியாத பெண் ஒருவர், தனது ஐந்து மாத பெண் குழந்தையை வைத்திருக்கும்படி திவ்யாவிடம் கொடுத்துள்ளார்.
ரயில்வே ஸ்டேஷன் வந்தபின் திவ்யா, குழந்தையை கொடுத்த பெண்ணை தேடியுள்ளார். அவர் இல்லாததால் குழந்தையை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்துள்ளார். போலீசார் குழந்தையை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வர மறுத்த மனைவியை கொன்ற கணவன் சரண்
விருதுநகர், பர்மா காலனியை சேர்ந்தவர் செந்துாரப்பாண்டி, 42, சென்னையில் இரும்பு கடையில் பணிபுரிந்தார். விருதுநகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் கல்பனா, 38. இருவரும் காதல் திருமணம் செய்து, 14 ஆண்டுகளாக வாழ்ந்தனர்; இரு குழந்தைகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால், இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்தனர். கல்பனா விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.
நேற்று மதியம், 12:00 மணிக்கு கல்பனா வீட்டிற்கு வந்த செந்துாரப்பாண்டி, தன்னுடன் வருமாறு கூறி தகராறு செய்தார். போலீசார் வருவதற்குள் செந்துாரப்பாண்டி, கத்தியால் கல்பனாவை குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து, மேற்கு போலீசில் சரண் அடைந்தார்.
'போக்சோ' வழக்கில் பள்ளி முதல்வர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 41;ரெட்டணை என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வர். இவர் தன் பள்ளியில்படிக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இதற்கிடையே, மேலும் ஒரு மாணவி, தன்னையும் அடிக்கடி அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக, கார்த்திகேயன் மீது புகார் தெரிவித்தார். அதன் மீதும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர், 14ல், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார், விசாரணை நடத்தி, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். நேற்று முன்தினம் காலை, அவரது வீட்டில்இருந்த கார்த்திகேயனை, போலீசார் கைது செய்து, விழுப்புரம் 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெர்மிஸ் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பயிர் நாசம்- விவசாயி தற்கொலை
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே அம்மன்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன், 51; விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். கடந்த டிச. 17, 18ல் பெய்த பலத்த மழை, வெள்ளத்தால் நெற்பயிர் முழுவதும் அடித்து செல்லப்பட்டது. இதனால் விரக்தியில் இருந்த பாஸ்கரன் நேற்று, பயிர் களைக்கொல்லி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
போதையில் வந்த மகன்: கொன்ற தந்தை கைது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கீரனுார் கோடாங்கி என்பவர் மகன் ராணி, 53. இவரது மனைவி இருளாயி, 50. இவர்களது மகன்கள் அருண்பாண்டி, அஜித் 19, மகள் அபிராமி, 21. தந்தை ராணி, சிவகங்கையில் உள்ள கடையில் பணிபுரிகிறார். அருண்பாண்டி மதுரை மாவட்டம் மேலுாரில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு அவர் போதையில் வீட்டுக்கு வந்தார்.
தம்பி அஜித்திடம் 'ஏன் வேலைக்கு செல்லவில்லை 'எனக் கேட்டு அவரை அடித்தார். இதை தந்தை ராணி தடுத்தார். ஆத்திரம் தீராத ராணி, வீட்டில் துாங்கிய அருண்பாண்டியின் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரியில் ஜிம் உரிமையாளர் படுகொலை
தர்மபுரி அடுத்த எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 30. இவர், தர்மபுரி அமுதம் காலனி அருகே ஜிம் நடத்தி வந்தார். எட்டிமரத்துப்பட்டியில், சாலை, சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது தொடர்பாக பிரகாஷ் உறவினரான, லாரி ஓட்டுனர் வெங்கடேசன், 42, என்பவருக்கும், பிரகாஷுக்கும் நேற்று முன்தினம் வழித்தடம், சாக்கடை கால்வாய் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நேற்று காலை மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வெங்கடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரகாஷை குத்தினார். படுகாயமடைந்த அவர் இறந்தார்; வெங்கடேசன் தப்பினார். எட்டிமரத்துப்பட்டியில் பதற்றம் நிலவி வருவதால், போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்தவர் கைது
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் எச்.டி.எப்.சி., வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 14ம் தேதி அதிகாலை 4:33 மணிக்கு மர்ம நபர் ஏ.டி.எம்., இயந்திரத்தின் அடிப்பகுதியை கழட்டி பணம் எடுக்க முயற்சித்துள்ளார். அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினார். கோவில்பட்டி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் கோவில்பட்டி பசுவந்தனை சாலை ராமலட்சுமிநகரை சேர்ந்த சங்கர், 45, என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
குஜராத் படகு விபத்து: 3 பேர் கைது
குஜராத் மாநிலம் வதோதராவில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், புறநகர் பகுதியில் உள்ள ஹர்னி ஏரிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்தபோது, திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீரில் மூழ்கிய 12 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக, ஏரியை பொழுதுபோக்கு மண்டலமாக பராமரித்து வரும் தனியார் அமைப்பின் திட்ட மேலாளர் சாந்திலால் சோலாங்கி மற்றும் படகு ஓட்டுனர்கள் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அலட்சியம் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதால் கைது எண்ணிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.