பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தோரில் 32,985 பேர் மீது குற்ற வழக்கு
பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தோரில் 32,985 பேர் மீது குற்ற வழக்கு
ADDED : நவ 04, 2025 06:41 AM

சென்னை: பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்த, 79.40 லட்சம் பேர் குறித்து, போலீசார் விசாரணை செய்ததில், 32,985 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, நுண்ணறிவு போலீசார் விசாரணை நடத்தி, தங்களின் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்.
இதற்காக அவர்களுக்கு, 'எம் பாஸ்போர்ட்' என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிக்கு கையடக்க கருவியும் வழங்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜூலை வரை, மாநிலம் முழுதும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்த, 79.40 லட்சம் பேர் குறித்து, போலீசார் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 32,985 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நுண்ணறிவு போலீசார் கூறுகையில், 'போதை பொருள் கடத்தல்காரர்கள், வெவ்வேறு யுக்திகளை பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்கின்றனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.

