செயலி வழி பரிவர்த்தனையில் குற்றவாளிகள் புதுவித மோசடி
செயலி வழி பரிவர்த்தனையில் குற்றவாளிகள் புதுவித மோசடி
ADDED : டிச 07, 2024 07:26 PM
சென்னை:மொபைல் போன் செயலி வாயிலாக, யு.பி.ஐ., பண பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை குறிவைத்து, புதிய வகை மோசடி நடப்பதாக, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
வங்கி கணக்குகளை இணைத்து பயன்படுத்தும், 'கூகுள்பே, போன்பே' உள்ளிட்ட செயலிகள் வாயிலாக, சைபர் குற்றவாளிகள், 5,000 ரூபாய் அனுப்புவர்.
அதன்பின், 'தவறுதலாக பணம் அனுப்பி விட்டேன். அந்த பணத்தை திரும்ப அனுப்புங்கள்' என்று, அதன் வழியாகவே கோரிக்கை விடுப்பர்.
அப்போது, நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்துள்ளதா என்பதை அறிய முற்படுவீர்கள். அதற்காக, செயலியில் ரகசிய குறியீடு எனப்படும், 'பின் நம்பர்'ஐ உள்ளீடு செய்வீர்கள்.
அந்த நேரத்தில், சைபர் குற்றவாளிகள், உங்கள் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்து விடுவர்.
இத்தகையை தந்திரமான மோசடியில், தற்போது சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், சைபர் குற்றவாளிகள் தவறுதலாக உங்களுக்கு பணம் அனுப்பி விட்டதாக கூறி, அதை திரும்ப அனுப்ப சொன்னால் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
அத்துடன், உங்கள் மொபைல் போன் செயலியில், சைபர் குற்றவாளிகள் பணத்தை திரும்ப பெறுதல் தொடர்பாக விடுத்த கோரிக்கையை ரத்து செய்ய, நீங்களே உங்கள் பின் நம்பரை தவறுதலாக உள்ளீடு செய்யுங்கள்.
உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை, சரியான பின் நம்பரை பதிவு செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.