எச்.ராஜா நடித்த 'கந்தன்மலை' திரைப்படத்திற்கு நெருக்கடி; தியேட்டர் கிடைக்காமல் 'யூ டியூப்'பில் இன்று ரிலீஸ்
எச்.ராஜா நடித்த 'கந்தன்மலை' திரைப்படத்திற்கு நெருக்கடி; தியேட்டர் கிடைக்காமல் 'யூ டியூப்'பில் இன்று ரிலீஸ்
ADDED : டிச 19, 2025 07:14 AM

மதுரை: திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்து பா.ஜ.,வினர் தயாரித்த 'கந்தன்மலை' திரைப்படத்தை வெளியிட தியேட்டர்களுக்கு நெருக்கடி இருப்பதால், இன்று 'யூ டியூப்'பில் படம் வெளியாகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டும் அரசால் நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பாக அவமதிப்பு மற்றும் மேல்முறையீட்டு வழக்குகள் குறித்த விசாரணை நடந்து வருகிறது.
கதாநாயகன் எச்.ராஜா ஒவ்வொரு ஆண்டும் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை கார்த்திகை மாதத்தில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை குறித்து 'கந்தன் மலை' என்று திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.
திருப்பரங்குன்றம் மலை அருகே உள்ள ஒரு கிராமமே கதைக்களம். இங்குள்ள நாடக காதல், கோயில்களில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் போன்ற கருத்துக்களை கொண்டதாக கதை அமைந்துள்ளது. முறுக்கிய மீசையுடன் எச்.ராஜா பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வில்லன் கேரக்டரில் நடிகர் சேரன்ராஜா நடித்துள்ளார்.
பா.ஜ., மாநில ஆன்மிகம் மற்றும் கோயில்கள் மேம்பாட்டு பிரிவு செயலாளர் சிவபிரபாகர், சந்திரசேகரன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை வீரமுருகன் இயக்கியுள்ளார். படத்தில் காதல், வீரம், சண்டை என நவரசமும் உண்டு.
தியேட்டர்களுக்கு நெருக்கடி தயாரிப்பாளர் சிவபிரபாகர் கூறியதாவது: இரண்டரை மணி நேரம் ஓடும் வகையில் தயாரித்த படம் தற்போது ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அறுபது நாளில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை இன்று (டிச.,19) தியேட்டர்களில் வெளியிடுவதாக இருந்தோம். ஆனால் அரசியல் நெருக்கடியால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எங்களுக்கு தியேட்டர் தருவதாக அறிவித்தவர்கள்கூட இப்போது, நீங்களே தியேட்டரை வாடகைக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். நாங்களாக திரையிட முடியாது எனக்கூறிவிட்டனர். அப்படி ஒவ்வொரு தியேட்டரையும் வாடகைக்கு எடுத்து ஓட்டுவது இயலாத காரியம். எனவே யூ டியூப்பில் வெளியிட தீர்மானித்துவிட்டோம். அதன்படி இன்று 'தாமரை' என்ற யூடியூப் தளத்தில் படம் வெளியாகிறது என்றார்.

