பெண்ணிற்கு 20 ஆண்டு சிறை: கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பு
பெண்ணிற்கு 20 ஆண்டு சிறை: கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பு
ADDED : ஏப் 30, 2025 05:33 AM

கடலுார்: பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பளித்தது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்த 14 மற்றும் 13 வயதுடைய பள்ளி மாணவிகள் 2014ம் ஆண்டு மாயமாகினர். இதுகுறித்து ஒரு சிறுமியின் தந்தை திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சிறுமிகளை கண்டுபிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில், விபசார கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது.
இது தொடர்பாக 22 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து இவ்வழக்கு, 2016ம் ஆண்டு கடலுார் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. கடலுார் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2 பேர் இறந்தனர்.
வழக்கில் அரியலுார் மாவட்டம், இடையக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி, விருத்தாசலம் ஜெபினா,40; ஆகியோர் தலைமறைவாகினர். 2019ம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் கடலுார் மகிளா கோர்ட், 17 பேரில் 16 பேருக்கு சிறை தண்டனை விதித்து, ஒருவரை மட்டும் விடுவித்து தீர்ப்பு கூறியது.
ஜெபினாவை 2024ம் ஆண்டிலும், சதீஷ்குமார், தமிழரசியை 2025ம் ஆண்டிலும் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர். ஜெபினா மீதான விசாரணை கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் நடந்தது.
வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லட்சுமி ரமேஷ் நேற்று, ஜெபினாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பு கூறினார். ஜெபினா கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற இருவர் மீதான விசாரணை நடந்து வருகிறது.