வாகனங்கள் விலை குறையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பு
வாகனங்கள் விலை குறையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 22, 2025 01:29 AM
சென்னை:தீபாவளிக்குள், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தங்கள் செய்யப்படும்' என, பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, வாகனங்களின் விலை குறையும் என நம்பி, வாடிக்கையாளர்கள் வாகனங்களை முன்பதிவு செய்ய தாமதிப்பதாக, முகவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, ஜி.எஸ்.டி., நான்கு அடுக்குகளாக உள்ளது. இதில், 12 மற்றும் 28 சதவீதங்களை நீக்கி விட்டு, 5 மற்றும் 18 சதவீதம் என, இரண்டு அடுக்குகளாக ஜி.எஸ்.டி.,யை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், 28 சதவீதத்தில் இருக்கும் சிறிய கார்கள் மற்றும் பைக்குகளுக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதமாகவும், சொகுசு கார்களுக்கு, 50ல் இருந்து 40 சதவீதமாகவும் குறையும் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு வரி குறைந்தால், பயணியர் கார், டூவிலர்களின் விலை, 11 சதவீதம்; சொகுசு மற்றும் பிரீமியம் கார்களின் விலை, 3 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதை எதிர்பார்த்து, வாடிக்கையாளர்கள் வாகனங்களை முன்பதிவு செய்ய தயங்குகின்றனர்.
இதுகுறித்து முகவர்கள் கூறியதாவது: ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் விலை குறையும் என்று நம்பி, வாகனங்களை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் தாமதிக்கின்றனர். தீபாவளி வரை காத்திருந்தால், வாகனங்களின் விலை குறையுமா என்று, எங்களிடமே கேட்கின்றனர். இதனால், பண்டிகை நாட்களான ஓணம், விநாயகர் சதுர்த்தி நாட்களில், விற்பனை மந்தமாக வாய்ப்பு உள்ளது. பண்டிகை நாட்களுக்காக வாகன உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
விற்பனை குறைந்தால், வாகன இருப்பு அதிகரிக்கும். ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் தொடர்பான குழப்பம் நீடிக்கும் வரை, விற்பனை குறைவாகவே இருக்கும். இதனால், எங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.