ADDED : மார் 11, 2026 04:25 AM

சென்னை: ''நடப்பு நிதியாண்டில், தமிழகத்தில் உள்ள 77 சுங்கச்சாவடிகள் வாயிலாக, 4,000 கோடி ரூபாய் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது,'' என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய, சென்னை மண்டல திட்ட அதிகாரி வீரேந்திர சாம்பியால் தெரிவித்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி: சென்னை - பெங்களூரு விரைவு சாலை திட்டத்தில், கர்நாடகா மாநில பகுதிகளில், பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. ஆந்திராவில் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் 106 கி.மீ.,க்கு சாலை அமைக்க வேண்டும்.
ஒப்பந்த நிறுவன செயல்பாடு காரணமாக, நான்காம் கட்டப் பணிகள் முடங்கி உள்ளன. அதனை துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 77 இடங்களில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் வாயிலாக, முந்தைய 2024 - 25ம் நிதியாண்டில், 4,300 கோடி ரூபாய் கட்டணம் வசூலானது.
நடப்பு 2025 - 26 ம் நிதியாண்டில், பிப்ரவரி 28ம் தேதி வரை 4,000 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. அதிகபட்சமாக, கிருஷ்ணகிரி - தொப்பூர் வழித்தடத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடியில், 275 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
குறைந்தபட்சமாக மீன்சுருட்டி - சிதம்பரம் வழித்தடத்தில் உள்ள, கருங்குழி சுங்கச்சாவடியில் 2.55 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இவ்வாறு கூறினார்.

