தனியார் நிறுவன லஞ்ச புகார் எதிரொலி சி.பி.ஐ., வளையத்தில் சுங்கத்துறையினர்
தனியார் நிறுவன லஞ்ச புகார் எதிரொலி சி.பி.ஐ., வளையத்தில் சுங்கத்துறையினர்
ADDED : அக் 31, 2025 02:09 AM
சென்னை:  சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் புகார் அளித்துள்ளதால், சி.பி.ஐ., விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட, 'வின்ட்ராக் இன்க்' என்ற நிறுவனம், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு, 'டார்ச்சர்' செய்வதால், இந்தியாவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்வதாக, சமீபத்தில் அறிவித்தது.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக, மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த, 12ம் தேதி, சென்னை விமான நிலைய சுங்க பிரிவில் பணியாற்றி வந்த முதன்மை கமிஷனர் தமிழ்வளவன், துணை கமிஷனர் ஹரேந்திர சிங் பால் ஆகியோர், டில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் வசூல் வேட்டை குறித்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள், மத்திய நிதியமைச்சகம் மற்றும் சி.பி.ஐ., அலுவலகத்திற்கு புகார்கள் அனுப்பியுள்ளனர்.
அதனால், சம்பந்தப்பட்ட சென்னை சுங்கத்துறை அதிகாரிகளை, விசாரணை வளையத்திற்குள் சி.பி.ஐ.,யினர் கொண்டு வந்துள்ளனர். சென்னை விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில், துணை, உதவி கமிஷனர், கண்காணிப்பாளராக பணிபுரியும் ஆறு பேர் மீது லஞ்சப் புகார்கள் வந்துள்ளன.
அது பற்றியும் விசாரணை துவங்கியுள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

