சிறுமலை டீக்கடைகளில் 'கட்டிங், குவார்ட்டர்' தாராளம்
சிறுமலை டீக்கடைகளில் 'கட்டிங், குவார்ட்டர்' தாராளம்
ADDED : மார் 29, 2025 05:33 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லிலிருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ள சிறுமலையில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
தற்போது கோடை துவங்கிய நிலையில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இங்கு டாஸ்மாக் கடைக்கு அனுமதி இல்லாததால், சிறுமலையை சேர்ந்த சிலர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி, புதுார், பழையூர் பகுதி டீக்கடைகளில் கூடுதல் விலைக்கு கூவிக் கூவி விற்பனை செய்கின்றனர். எந்த அச்சமும் இல்லாமல் இரவு பகல் பாராமல் டீக்கடையின் அருகே மது குடிக்கவும் வழிவகை செய்துள்ளனர்.
சிலர் குவார்ட்டர், கட்டிங் என, பிரித்து விற்கின்றனர். இதனால் சிறுமலை சுற்றுலா பயணியர், காட்டேஜ்களில் புகுந்து எல்லை மீறும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டிய திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார், அவ்வப்போது கணக்கு காட்ட சிலரை கைது செய்கின்றனர். போலீசார் சிறுமலை முழுதும் ஆய்வு செய்து, சட்ட விரோத மதுவிற்பனையை தடுக்க வேண்டும்.