12 மணி நேரத்தில் உருவாகிறது பெங்கல் புயல்; தேதி குறித்தது இந்திய வானிலை மையம்!
12 மணி நேரத்தில் உருவாகிறது பெங்கல் புயல்; தேதி குறித்தது இந்திய வானிலை மையம்!
UPDATED : நவ 27, 2024 08:38 AM
ADDED : நவ 27, 2024 08:37 AM

புதுடில்லி: 'வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் 'பெங்கல்' புயலாக வலுப்பெறுகிறது' என இந்திய வானிலை மையம் அறிவித்தது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில், 590 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து, 710 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து, 800 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 13 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் 'பெங்கல்' புயலாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பகுதி வழியாக தமிழக கடற்கரை நோக்கி புயல் நகரும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தமிழகத்தை நோக்கி, புயல் நகர்வதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

