பெஞ்சல் புயல் பாதிப்பு; ரூ.2,000 கோடி நிவாரணத் தொகையை விடுவிக்க கனிமொழி வலியுறுத்தல்
பெஞ்சல் புயல் பாதிப்பு; ரூ.2,000 கோடி நிவாரணத் தொகையை விடுவிக்க கனிமொழி வலியுறுத்தல்
ADDED : டிச 03, 2024 05:16 PM

சென்னை: தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில், ரூ.2,000 கோடி நிவாரணத் தொகையை இந்த முறையாவது உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், பார்லி., குழுத் தலைவருமான கனிமொழி, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (டிச.,03) 'நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும். இந்த நிவாரண நிதியை உடனடியாக வழங்குவது குறித்து லோக்சபாவில் விவாதிக்க வேண்டும். பெஞ்சல் புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி திமுக எம்.பி., கனிமொழி ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தமிழக எம்.பி.,க்கள் வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி, பெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களைக் கருத்தில்கொண்டு, உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தற்காலிகமாகச் சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண நிதியினை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.