ADDED : அக் 04, 2025 02:49 AM
சென்னை:சக்தி புயல் காரணமாக மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், சென்னை அடையாறு, வேளச்சேரி, மாதவரம், விமான நிலையம், கொரட்டூர், காசிமேடு, ஆலந்துார், தண்டையார்பேட்டை, அயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில், தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
வடகிழக்கு அரபி கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, நேற்று காலை நிலவரப்படி, குஜராத் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது. இது புயலாக மாறிய நிலையில், 'சக்தி' என பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த, 24 மணி நேரத்தில், இது தீவிர புயலாக மாறக்கூடும்.
தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில், அக்., 9 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யக்கூடும். மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.