வலுவிழந்த நிலையிலும் பலத்த மழையை தந்த 'டிட்வா' புயல்
வலுவிழந்த நிலையிலும் பலத்த மழையை தந்த 'டிட்வா' புயல்
ADDED : டிச 02, 2025 06:59 AM

சென்னை:வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் கன மழை தொடர உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 6 செ.மீ., மழை பெய்து உள்ளது. அடுத்தபடியாக, சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கத்திவாக்கம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், கடலுார் மாவட்டம் அண்ணாமலை நகர் ஆகிய இடங்களில் தலா, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நேற்று முன்தினம் மாலையில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
நேற்று காலை 11:30 மணி நிலவரப்படி, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவியது.
இது, எதிர்பார்த்த வேகத்தில் வடக்கு திசையில் நகரவில்லை. மணிக்கு 3 கி.மீ., வேகத்திலேயே இதன் நகர்வு இருந்தது. சென்னையில் இருந்து கிழக்கில், 50 கி.மீ., தொலைவில் இது நிலை கொண்டு இருந்தது.
அடுத்த 12 மணி நேரத்தில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நேற்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது.
இதையடுத்து, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை உட்பட தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 7 வரை மிதமான
தொடர்ச்சி 2ம் பக்கம்
மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்ட கடலோரப் பகுதிகள், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

