அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து; வெடித்துச் சிதறியதால் பரபரப்பு
அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து; வெடித்துச் சிதறியதால் பரபரப்பு
ADDED : நவ 11, 2025 10:10 AM

அரியலூர்: அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதில், பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் வாரணவாசி பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பும் போது திருச்சியில் இருந்து காஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானது. இதில் லாரி எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. லாரியில் இருந்த சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது.
தீ விபத்துக்குள்ளான சிலிண்டர் லாரியில் இருந்து டிரைவர் கனகராஜ் குதித்து தப்பியுள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். லாரியில் சிலிண்டர் வெடித்து சிதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

